| ADDED : ஜூலை 22, 2024 02:05 AM
கோவை:படுக்கையிலுள்ள நோயாளிகளின் பேச்சு குறைபாட்டை சரி செய்து, கண்களின் சைகை வாயிலாக தகவல்களை தெரிவிக்கும் வகையில், 'நேத்ராவாத்' எனும் ஒரு புதுமையான தொழில்நுட்பத்தை, அமிர்த விஷ்வ வித்யாபீடம் பல்கலை உருவாக்கியுள்ளது.அமிர்தா மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டுள்ள, இந்த தனித்துவம் வாய்ந்த தொழில்நுட்பம், மருத்துவ சாதனங்கள் மற்றும் உயிரி பொருட்களுக்கான துவக்க நிலை சுகாதார தொழில் நுட்பமாகும்.பேச முடியாத நோயாளிகள், தங்களது தேவைகளை சரியாக உணர்த்துவதற்கு, கண் சைகை அடிப்படையிலான, இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. அமிர்தா பல்கலையின், 'ஹட்லேப்ஸ்' என்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் 'ரோபோட்டிக்ஸ்' ஆராய்ச்சி மையத்தின் கீழ், இத்தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது.இது குறித்து, அமிர்த விஷ்வ வித்யாபீடம், ஹட்லேப்ஸ் இயக்குனர் ராஜேஷ் கண்ணன் மேகலிங்கம் கூறுகையில், ''கண் சைகைகளின் வாயிலாக, தகவல்தொடர்புகளை பரிமாறும் நேத்ராவாத், பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கு பயனளிக்கும். நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட மக்களின், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும். விரைவில் இத்தொழில்நுட்பத்தை, சமூகத்துக்கு வழங்கவுள்ளோம்,'' என்றார்.