பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கடைகளுக்கு முன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு அமைப்பதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி நகரில், முக்கிய வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதி, மருத்துவனை போன்றவற்றில் 'பார்க்கிங்' கிடையாது.சில கடைகளுக்கு 'பார்க்கிங் ஏரியா' இருந்தாலும், அதை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துகின்றனர். இதனால், அத்தியாவசிய தேவைக்காக வரும் மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கின்றனர்.பிற கடைகள் அல்லது குடியிருப்புகளுக்கு முன், வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதை தடுக்க, சில கடைக்காரர்கள் ரோட்டை ஆக்கிரமித்துகயிறு கட்டி வைக்கின்றனர்.பாலக்காடு ரோடு, வெங்கடேசா காலனி, ஐயப்பன் கோவில் வீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்துக்கு இடையூறாக தடுப்பு வைக்கின்றனர். இதனை, துறை ரீதியான அதிகாரிகள் கண்டறிந்து தடுக்க வேண்டும்.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அனைத்து கட்டடங்களுக்கு முன்பும், சிறிது இடம் விடப்படும். அந்த இடத்தையும் அவர்களே ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.தனியார் வணிக நிறுவனங்கள், அலுவலகங்களின் முன், போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டை ஆக்கிரமித்து, தடுப்பு வைக்கப்படுவதால், வாகனங்களில் செல்வோர் பாதிக்கின்றனர். இத்தகைய விதிமீறலை தடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.