கோவை;''நம்முடைய அடுத்த தலைமுறைக்காக, பிரதமர் மோடி வேலை செய்து கொண்டு இருக்கின்றார்,'' என, அண்ணாமலை பெருமிதம் தெரிவித்தார்.கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம், புலியகுளத்தில் நடந்தது. இதில், பா.ஜ., மாநில தலைவரும், கோவை லோக்சபா தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது: பிரதமர் மோடி சொல்லும், 400 லோக்சபா உறுப்பினர்களில், தமிழகத்தில் இருந்து நிறைய பேர் செல்லயிருக்கின்றனர். கோவையை, 10 ஆண்டு காலம், கம்யூனிஸ்ட் கட்சியினர் பின்னோக்கி இழுத்து சென்று விட்டனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்து காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால், இன்னும் ஒரு மானியம் கூட கொடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். மக்களுக்காக, சுயநலமில்லாத அற்புதமான ஒரு நபர், பிரதமர் மோடி. அவரை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை எனில், சரித்திர தவறு செய்து விடுவோம். அடுத்த, 25 நாட்கள் மோடிக்காக நாம் உழைக்க வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறைக்காக, பிரதமர் மோடி வேலை செய்து கொண்டு இருக்கின்றார். கோவை மாவட்டம் தான், 'முத்ரா' திட்டத்தில் அதிகம் பலன் அடைந்த மாவட்டம். மக்கள் மாற்றத்திற்கு தயாராக இருக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.நிருபர்களிடம், அவர் கூறியதாவது:பிரதமர் மோடியை பற்றி பேச முதல்வருக்கு தகுதி இல்லை. கோவை உட்பட நகரங்களில் கஞ்சா இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா? போதை கலாச்சாரம் இல்லை என்பதை சொல்ல முடியுமா? தமிழக அரசின் கடன், 8 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் தாண்டி இருக்கின்றது. எனக்கு அடையாளம் கொடுத்தது கோவை.அந்த கோவைக்கு நல்லது செய்வதற்கு வருகிறேன். கோவையின் மாற்றத்திற்கு, தீவிரவாதம், போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வருகிறோம். நாங்கள் வந்தால் வளர்ச்சியை கொண்டு வருவோம், மெட்ரோ ரயில் கொண்டு வருவோம். ஆயிரம் கோடியை கொண்டு வந்து பணமழை பொழிந்தாலும், மக்களின் அன்பு மழை, தேசிய ஜனநாயக கூட்டணி மீது இருக்கும்.வேட்புமனு தாக்கலுக்கு பின், மாநில முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கின்றேன்.இவ்வாறு, அவர் கூறினார்.கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.