உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் கட்டண உயர்வு ரத்து செய்ய விசைத்தறியாளர்கள் கோரிக்கை

மின் கட்டண உயர்வு ரத்து செய்ய விசைத்தறியாளர்கள் கோரிக்கை

சோமனுார்;மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், விசைத்தறி தொழிலில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மின் கட்டணத்தை ரத்து செய்ய விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் குமாரசாமி, பூபதி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: கடந்த, 2011ம் ஆண்டு ஒப்பந்தப்படி தான் தற்போதும் கூலி வழங்கப்பட்டு வருகிறது.13 ஆண்டுகளாக, தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், விசைத்தறி தொழில், பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. பள்ளி, கல்லுாரி செலவு, மருத்துவ செலவு உள்ளிட்ட காரணங்களாலும் சிக்கி தவிக்கிறோம். இதற்கிடையில் கடந்த, மூன்று ஆண்டுகளில், மூன்று முறை மின் கட்டணம் விசைத்தறி தொழிலுக்கு உயரத்தப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.ஏற்கனவே, தொழில் நடத்த முடியாமல், விசைத்தறிகளை உடைத்து விசைத்தறியாளர்கள் விற்றுவரும் சூழலில், தற்போதைய மின் கட்டண உயர்வை தாங்க முடியாது. கடந்த வாரத்தில் தான், கூட்டு கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில், ஆண்டு தோறும் கட்டணத்தை உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும், என, தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டரிடம் மனு அளித்திருந்தோம். இப்போது, இடியாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் விசைத்தறியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். உடனடியாக கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை