உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்திய உணவு கழகத்தின் குடோன்களில் 2.27 லட்சம் டன் அரிசி, 61 ஆயிரம் டன் கோதுமை இருப்பு உள்ளதாக மண்டல மேலாளர் தகவல்

இந்திய உணவு கழகத்தின் குடோன்களில் 2.27 லட்சம் டன் அரிசி, 61 ஆயிரம் டன் கோதுமை இருப்பு உள்ளதாக மண்டல மேலாளர் தகவல்

கோவை;பொது வினியோகத் திட்டம் உட்பட, பல்வேறு திட்டங்களின் கீழ் மக்களுக்கு வழங்குவதற்காக, இந்திய உணவுக் கழகத்தின் கோவை மண்டல குடோன்களில், 2.27 லட்சம் டன் அரிசி, 61 ஆயிரம் டன் கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, இந்திய உணவுக் கழக கோவை மண்டல மேலாளர் சுமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இந்திய உணவுக் கழக கோவை மண்டல அலுவலகத்துக்கு சொந்தமாக, 2 லட்சத்து 28 ஆயிரத்து 650 டன் கொள்ளளவு கொண்ட 3 குடோன்கள்; 90 ஆயிரத்து 104 டன் கொள்ளளவு கொண்ட, 7 வாடகை குடோன்கள் உள்ளன.இக்குடோன்கள் வாயிலாக, 9 வருவாய் மாவட்டங்களுக்கான தானிய தேவையை, இந்திய உணவுக் கழகம் பூர்த்தி செய்து வருகிறது.உபரியாக இருக்கும் மாநிலங்களில் இருந்து, பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் தானியங்கள், பொது வினியோகத் திட்டம் உள்ளிட்ட, நலத்திட்டங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன.இந்த வினியோகத்துக்கான சரக்குகளை, இந்திய உணவுக் கழகம் கையாள்கிறது.கடந்த ஏப்., மாதம் 83 ஆயிரத்து 284 டன் தானியங்களை, கோவை மண்டல அலுவலகம் கையாண்டுள்ளது. கோவை மண்டல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 10 தானியக் கிடங்குகளின் மொத்த கொள்ளளவு 3 லட்சத்து 18 ஆயிரத்து 754 டன்.இவற்றில், மே 25ம் தேதி நிலவரப்படி, 2 லட்சத்து 27 லட்சத்து 985 டன் அரிசி, 61 ஆயிரத்து 224 டன் கோதுமை இருப்பு உள்ளது.

பொது வினியோகத் திட்டம்

கோவை மாவட்டத்தில், குடிமைப் பொருள் வழங்கல் துறையின் கீழ் இயங்கும் 9,255 ரேஷன் கடைகள் வாயிலாக, பொது வினியோகத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.இந்திய உணவுக் கழக கோவை மண்டல அலுவலக குடோன்களில் இருந்து, 9 மாவட்டங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள், நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன.தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒதுக்கீடு செய்யப்பட்ட தானியங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பி.எம்., போஷன், கோதுமை அடிப்படையிலான ஊட்டச்சத்து திட்டம், போன்ற நலத்திட்டங்கள் வாயிலாகவும், திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டம் வாயிலாகவும், இந்திய அரசின் விலைக்கட்டுப்பாட்டு அளவுகளின்படி, இந்த தானியங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கோதுமை கிலோ ரூ.21.50 (எப்.ஏ.க்யூ., ரகம்), ரூ.21.25 (யூ.ஆர்.எஸ்., ரகம்), அரிசி கிலோ ரூ.29 என்ற அடிப்படை விலையில், இந்திய உணவுக் கழகத்தால் வழங்கப்படுகிறது.இவ்வாறு, சுமன் தெரிவித்துள்ளார்.

'அரிசிக்கு முக்கியத்துவம்'

''விளிம்பு நிலை மக்களிடையே ரத்தசோகை, நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக, அரசு பல்வேறு நலத் திட்டங்களின் கீழ், மக்களுக்கு உணவு தானியங்களை வினியோகம் செய்கிறது. செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் இதில் முக்கியப் பங்காற்றுகிறது,'' என கூறியுள்ளார் சுமன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி