யாருக்கு வெற்றினு நாளைக்கு தெரியும்!
லோக்சபா தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி என்று அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அ.தி.மு.க.,வை சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், பலத்தோடு அந்த கட்சி தேர்தலை சந்தித்துள்ளது.தி.மு.க.,வும், உள்ளாட்சி பிரதிநிதிகள், அமைச்சர்களோடு இணைந்து தேர்தலில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். இறுதி கட்டமாக இரு திராவிட கட்சிகளும் 'கவனிப்பு' செய்தனர்.இந்த முறை இந்த இரு கட்சிகளுக்கும், 'டப்' கொடுக்கும் வகையில், பா.ஜ.,வின் தேர்தல் வியூகம் இருந்தது. எப்போதும் இல்லாத அளவு, மும்முனை போட்டியாக உள்ளதால், யாருக்கு வெற்றி கிடைக்கும் என உறுதியாக சொல்ல முடியாத நிலையில், 'பெட்' கட்டி கட்சியினர் காத்திருக்கின்றனர்.மக்களிடையே கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில், பல லட்சங்களை 'பெட்' கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வேட்பாளர்களை விட, 'பெட்' கட்டியுள்ளவர்கள் தேர்தல் முடிவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.எது எப்படி இருந்தாலும், நாளை ஓட்டு எண்ணிக்கையின் போது யாருக்கு வெற்றி என்பது தெரிந்து விடும். 'பெட்' கட்டியவர்களில் யாருக்கு 'கல்லா' கட்டும் என்பதும் தெரிந்து விடும். 'டிரான்ஸ்பர்' கேட்கும் அதிகாரிகள்
பொள்ளாச்சி நகராட்சி அதிகாரி ஒருவரை சந்தித்தேன். 'இந்த ஊருல வேலை செய்யறதுக்கு தனி திறமை வேணுமுங்க,' என, நொந்து போய் பேசினார். என்னாச்சு சார் என விசாரித்தேன்.பொள்ளாச்சி நகரப்பகுதியில, புதிது புதிதாக வணிகக் கடைகள் திறக்கப்படுகின்றன. இதற்கு, நகராட்சியில் தொழில் உரிமம் மற்றும் பதிவு சான்று வாங்கணும். கடை திறப்புக்கு, 30 நாட்கள் முன்னரே, அனுமதி கோர வேண்டும். ஆனால், எந்த அனுமதியும் வாங்காமல் கடைகளை திறக்கறாங்க. தொழில் உரிமம் பெறுவதற்கு அறிவுறுத்தினாலும் அலட்சியமாக இருக்காங்க. இதற்கு, அரசியல் தலையீடே காரணம்.அதேபோல, எந்தவொரு நகராட்சி அதிகாரியையும், அரசியல் கட்சியினர் சுதந்திரமாக பணி செய்ய விடுவதில்லை. இதனால், பிற நகராட்சிகளில் பணிபுரியும் அதிகாரிகள், 'பொள்ளாச்சி நகராட்சிக்கா? வேண்டவே வேண்டாம்,' என, எஸ்கேப் ஆகி விடுகின்றனர். இங்க பணியில இருக்கறவங்க, எப்படா 'டிரான்ஸ்பர்' கிடைக்கும்னு காத்திருக்காங்க, என்றார். கட்சி பாகுபாடால் மக்கள் பாதிப்பு
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த, தாமரைக்குளம் கிராம மக்கள், அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். என்ன பிரச்னைனு விசாரித்தபோது, 'எங்க ஊருல ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி சண்டைங்க, இதுல, நாங்க தான் பாதிக்கிறோம்னு' சொன்னாங்க.கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க என்றதும், நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைகுளம் முதல் வார்டு உறுப்பினர் அ.தி.மு.க.,வை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி; அவரது கணவர் விக்ரம். ஊராட்சி தலைவர் தி.மு.க.,வை சேர்ந்த கார்த்திகா; அவரது கணவர் குமரேசன்.ஊராட்சி கூட்டத்திலும், கிராம சபை கூட்டத்திலும், கணக்கு, பணிகள் குறித்து செந்தமிழ்ச்செல்வி கேள்வி எழுப்புகிறார். இதனால, முதல் வார்டை விரோதி வார்டு போன்று பாரபட்சமா வச்சிருக்காங்க.அதனால, ஊராட்சி சார்ந்த எல்லா பணிகளுமே முதல் வார்டுக்கு கடைசியாகத்தான் வருது. அப்படியே புதிய திட்டம் ஏதும் வந்தாலும், மக்கள் போராடி தான் பெற வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக, முதல் வார்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பை துண்டிச்சுட்டாங்க. குடிநீர் வரலைனு சொன்னா, தேர்தல் நடைமுறையை காரணமா சொல்றாங்க. அவர்களுக்குள் இருக்கும் கட்சி பிரச்னையில் மக்களை அலைமோதவிடுறாங்க, என, புலம்பினர். ஆட்சிக்கு கெட்ட பேரு ஏற்படுத்தாதீங்க!
அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி துவங்கிட்டோம், குழந்தைகளை அரசு பள்ளியில் அட்மிஷன் போடுங்கணு, ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாங்க. அதை நம்பி, உடுமலை பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 ஆங்கில வழி ஆர்ட்ஸ் குரூப்பில், குழந்தைகளை சேர்க்க பெற்றோர் சென்றனர்.ஆனால், ஆங்கில வழி கலைப்பிரிவில் மாணவர்களை சேர்க்க பள்ளி நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். இதனால், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட பெற்றோர் தயாராகினர்.அப்போது, அங்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினார்.'நீங்கள் அட்மிஷன் போடாவிட்டால், எங்கள் ஆட்சிக்குதான் கெட்ட பெயர் வரும். எந்த பிரச்னையாக இருந்தாலும் உங்கள் உயர் அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆங்கில வழி கலைப்பிரிவு சேர விரும்பும் மாணவர்களை அட்மிஷன் பண்ண வேண்டும். முறையான பதில் வரும் வரை, பள்ளியை விட்டு செல்ல மாட்டேன்,' என கொந்தளித்தார்.ஒரு வழியாக பள்ளி நிர்வாகத்தினர், ஆளுங்கட்சி பிரமுகரை சமாதானப்படுத்தி அனுப்பியதுடன், உயர் அதிகாரிகளிடம் பேசி, பிளஸ் 1 கலைப்பிரிவு அட்மிஷனை துவங்கினர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிதியில் முறைகேடு
உடுமலை, ஏரிப்பாளையத்துல இருக்கற நண்பரை சந்தித்தேன். 'நாங்க குடியிருக்கற ஏரியாவுல, துர்நாற்றமா இருக்கு. நிம்மதியாக மூச்சுக்கூட விட முடியலை,' என, புலம்பினார். உங்க ஏரியாவுல என்ன பிரச்னை, நகராட்சியில புகார் பண்ண வேண்டியது தானே... என்றேன்.நகராட்சி நிர்வாகத்தால் தான் பிரச்னையே... என்று, அவரே தொடர்ந்து கூறினார். உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஏரிப்பாளையம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.ஆனா, சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக பராமரிப்பு பணி நடப்பதில்லை. மேலும், பணியாளர்கள் நியமிக்காததால், திரவ கழிவுகள் அனைத்தும் சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது.இதனால், துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, அப்பகுதி விவசாயிகளும் பாதிக்கின்றனர். நகராட்சி நிர்வாகத்தில் இருக்கும் ஒரு சில நபர்களே டெண்டர் எடுத்து, சுத்திகரிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஒட்டுமொத்தமாக முறைகேடு செய்கின்றனர். இதனால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படுவதில்லை. துர்நாற்றத்தால் மக்கள் படும் அவதியும் நகராட்சி நிர்வாகத்துக்கு புரிவதில்லை, என்றார். மக்களுக்காக செயல்படும் நகராட்சி நிர்வாகத்துக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்குமே வெளிச்சம்!
போலீஸ்காரங்க யாராவது இருக்காங்களா?
உடுமலை நகரின் மையப்பகுதியிலுள்ள காலியிடத்தில், கஞ்சா விற்பனையும், 'குடி'மகன்கள் அட்ராசிட்டியும் அதிகரிச்சிருக்கு. இதை தடுக்க செய்தி போடுங்க... என, அப்பகுதி மக்களிடம் இருந்து போன் தகவல் வந்தது.தகவல் கொடுத்த மக்களிடம் விசாரித்த போது, உடுமலை ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல தான் கஞ்சா விற்கறாங்க. அங்க, பயன்பாடு இல்லாத அரசு அலுவலர் குடியிருப்பும், அதையொட்டி, புதர் மண்டி கிடக்கிற காலியிடமும் இருக்கு.அங்க, நைட் ஒன்பது மணிக்கு மேல, கூட்டம், கூட்டமாக 'குடி'மகன்கள் சேர்ந்துட்டு கூத்தடிக்கிறாங்க. அதோட, அங்க கஞ்சாவும் சேல்ஸ் பண்றாங்க. இதனால, அந்த வழியா, நைட் நேரத்துல போறதுக்கே பயமாயிருக்கு.யாராவது போனாலும், மெயின் ரோட்டுலேயே தடுத்து நிறுத்தி அந்த வழியா போக வேண்டான்னு, அப்பகுதி மக்கள் எச்சரிக்கை கொடுக்கறாங்க.நல்ல வேளை, இப்போதைக்கு நைட் ரயில் எதுவும் வர்றதில்லை. ரயில் வந்தா, அதுல வர்ற மக்களுக்கு பாதுகாப்பு இல்லாம போயிடும்.டவுனுக்குள்ளேயே இந்த அட்டூழியம் நடந்தும், போலீஸ் ஏன் கண்டுக்காம இருக்காங்கணு தெரியல. ஏதாவது அசாம்பவிதம் நடக்குறதுக்குள்ள போலீஸ்காரங்க நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்கும்ணு திருப்பூர் எஸ்.பி.,க்கும் புகாரும் மனுவும் அனுப்பியிருக்காங்க, என்றனர்.