| ADDED : ஜூலை 11, 2024 11:51 PM
கோவை : கடந்த, 1967ல் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள், 57 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து நெகிழ்ச்சி அடைந்தனர்.கடந்த, 1965--67ல் அப்போதைய கோவை மாவட்டம் கரடிவாவியில் இருந்த, எஸ்.எல்.என்.எம்., ஆசிரியர் பயிற்சி பள்ளியில், 40 மாணவர்கள் படித்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து படித்து, ஆசிரியர் பயிற்சி முடித்த அம்மாணவர்கள், ஆசிரியர்களாக, தலைமையாசிரியர்களாக உயர்ந்து, பல்லாயிரம் மாணவ, மாணவியருக்கு கல்வியை போதித்தனர். காலம் கடந்தது; அவர்களில் பெரும்பாலானோர் ஓய்வு பெற்று பேரன், பேத்திகளுக்கு தற்போதும் பாடம் கற்பித்து வருகின்றனர்.இந்நிலையில், கோவை, நேரு நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ரத்தினம், கரடிவாவி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தன்னுடன் படித்த நண்பர்களை, நட்புக்கு இலக்கணமாக சந்திக்க முடிவு செய்தார். நண்பர்களின் தொடர்பு எண்களை கண்டுபிடித்து அழைப்பு விடுத்தார்.அழைப்பை ஏற்று, 24 நண்பர்கள் ஆஜராகினர். 57 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் சந்தித்ததால், ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து நெகிழ்ந்தனர். ஆசிரியர் பயிற்சி கால நினைவுகளை பரிமாறிக் கொண்டனர். அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவம் செய்யப்பட்டது.ஆசிரியர் ரத்தினம் கூறுகையில், ''நட்பின் இலக்கணமாக இருந்த நண்பர்களை பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தது எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்தது,'' என்றார்.