பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம், கோவனூர், ராயர் ஊத்துப்பதி அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்தில் உள்ள சால்சர் மற்றும் சையிடர் நிறுவனங்களின் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இது குறித்து, சால்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் துரைசாமி கூறுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்த, கோவனூர் அருகே ராயர் ஊத்துப்பதி வட்டாரத்தில் மலையடிவாரத்தில் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை உதவியுடன் வேம்பு, மகாகனி, தேக்கு, சந்தனம், மலைவேம்பு, புளியன், கொடுக்காப்புளி, மா, பலா, மஞ்சக்கடம்பு, சவுக்கு, அரசு, ஆல் உள்ளிட்ட, 6000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சுமார், 80 ஏக்கர் பரப்பில் நடப்பட்டு உள்ளன. வனவிலங்குகளிடமிருந்து மரங்களை காப்பாற்ற, பாதுகாப்பான வேலி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் சால்சர் நிறுவனத்தின் உதவி தலைவர் லட்சுமி நாராயணா, மனிதவள மேம்பாட்டு துறை முதன்மை மேலாளர் ராமன் உள்ளிட்ட ஊழியர்கள், வனத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.