உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரும்புக்கடை - சாரமேடு சந்திப்பில் சிக்னல்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரும்புக்கடை - சாரமேடு சந்திப்பில் சிக்னல்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோவை:கரும்புக்கடை - சாரமேடு சந்திப்பு பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, அப்பகுதி பொதுமக்களிடம் இருந்து எழுந்திருக்கிறது.கோவை கரும்புக்கடை பகுதியில், வர்த்தக நிறுவனங்கள், ஒர்க் ஷாப்கள், கடைகள், குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளன. கரும்புக்கடை, சாரமேடு, ஆசாத் நகர், சேரன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மக்கள் அடர்த்தியாக வாழ்கின்றனர். இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம், வாகன இயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.கரும்புக்கடையில் இருந்து சாரமேடு செல்லவோ அல்லது இப்பகுதியில் இருந்து செல்லவோ, நெடுஞ்சாலையை கடக்க வேண்டும். இதற்காக, உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால பணியில், இப்பகுதியில் மையத்தடுப்பு அமைக்காமல், இடைவெளி விடப்பட்டுள்ளது.உக்கடத்தில் இருந்து போத்தனுார் மற்றும் பொள்ளாச்சி ரோட்டுக்கு செல்வோர் மற்றும் பாலக்காடு ரோட்டுக்குச் செல்வோர், ஆத்துப்பாலத்தை கடப்பதற்கு, கரும்புக்கடை வழியாகவே செல்ல வேண்டும்.இதன் காரணமாக, இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் எப்போதும் சென்று கொண்டே இருக்கின்றன. காலை, மாலை என 'பீக் ஹவர்ஸில்' வாகனங்கள் வரிசையாக தேங்கி விடுகின்றன.இச்சமயங்களில், கரும்புக்கடை, சாரமேடு பகுதியில், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ரோட்டை கடந்து செல்ல முடிவதில்லை.பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி ரோடுகளில் இருந்து வாகனங்களில் வருவோர் கரும்புக்கடையில் திரும்பும்போது, உக்கடத்தில் இருந்து வாகனங்கள் வருவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.இதேபோல், சாரமேடு பகுதியில் இருந்து கரும்புக்கடை வர வேண்டியவர்கள், கரும்புக்கடையில் இருந்து உக்கடம் நோக்கிச் செல்வோர், ரோட்டை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.இதற்கு தீர்வு காண, கரும்புக்கடை பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் அல்லது போக்குவரத்து போலீசாரை கூடு தலாக நியமித்து, வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ