உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி பள்ளிகளில் காலி பணியிடம் மறைப்பு பணி நிரவல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் அதிருப்தி

மாநகராட்சி பள்ளிகளில் காலி பணியிடம் மறைப்பு பணி நிரவல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் அதிருப்தி

கோவை;கோவை மாநகராட்சி பள்ளிகளில், பணி நிரவல் முறையில் கலந்தாய்வு நேற்று நடந்தது. அதில், காலி பணியிடங்களை மறைத்ததால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.கோவை மாநகராட்சி சார்பில், 148 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மாணவர் சேர்க்கை அடிப்படையில், ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. கூடுதலாக உள்ள ஆசிரியர்கள், பணி நிரவல் அடிப்படையில் தேவைப்படும் பள்ளிகளுக்கு இட மாறுதல் செய்யப்படுகின்றனர். மீதமுள்ள காலி பணியிடங்களுக்கு, கலந்தாய்வு முறையில் அரசு பள்ளிகளில் இருந்து பணி மாற்று அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள்.இந்நடைமுறையில், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், கல்வி அலுவலர் (பொ) குணசேகரன் தலைமையில் பணிநிரவல் கலந்தாய்வு நேற்று நடத்தப்பட்டது. 19 இடைநிலை ஆசிரியர்கள், 17 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்று, பணியிட மாறுதல் பெற்றனர். இதில், எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்கிற முழுமையான பட்டியலை, மாநகராட்சி நிர்வாகத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்கிற குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.இதுதொடர்பாக, மாநகராட்சி ஆசிரியர்கள் கூறுகையில், 'மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் விபரங்கள், அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். இம்முறை அவ்வாறு ஒட்டவில்லை. மாறாக, எந்தெந்த பள்ளியில் இருக்கிறதென தோராயமாக காட்டப்பட்டது. ஒரு பள்ளியில் நான்கு ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கிறது; இரண்டு பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக கூறி, நிரப்பப்பட்டது. மீதமுள்ள இரு இடம் கலந்தாய்வு முறையில் நிரப்ப இருப்பதாக கூறுகின்றனர். அதேபோல், சில பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை வெளியிடவே இல்லை. அதனால், பணி நிரவல் கலந்தாய்வை ரத்து செய்து விட்டு, காலி பணியிடங்களை முழுமையாக அறிவித்து, புதிதாக நடத்த வேண்டும்' என்றனர்.இதுகுறித்து, மாநகராட்சி கல்வி அலுவலர் (பொ) குணசேகரனிடம் கேட்டதற்கு, ''ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு பலகையில் ஒட்டுவது வழக்கம். இம்முறை கூட்டரங்கில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. கல்வி பிரிவு அலுவலகம் வேறிடத்தில் செயல்படுகிறது. அங்கு அறிவிப்பு ஒட்டி விட்டு, கூட்டரங்கில் கலந்தாய்வு நடத்தினால் நன்றாக இருக்காது. காலி பணியிடங்களை வெளியிடக் கூடாது என நினைக்கவில்லை. எந்தெந்த பள்ளிகளில் பணியிடம் இருக்கிறது என ஆசிரியர்களிடம் 'லிஸ்ட்' காட்டினோம். அதில், விரும்பிய பள்ளியை தேர்வு செய்தனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்