| ADDED : மே 20, 2024 01:02 AM
மேட்டுப்பாளையம்:சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி தகர ஷீட்டில், தவறி விழுந்த குழந்தையின் தாய், காரமடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஷ், 35, ரம்யா, 33 தம்பதியினர் குடியிருந்தனர். வெங்கடேஷ் திருவாரூரை சேர்ந்தவர். ரம்யா கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் 7 வருடங்களுக்கு முன் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருவரும் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி., நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது 7 மாத பெண் குழந்தை, அடுக்குமாடி குடியிருப்பு மாடியில் உள்ள பால்கனி தகர ஷீட்டில் தவறி விழுந்தது. குழந்தையை அக்கம் பக்கத்தினர் ஒன்றாக இணைந்து மீட்டனர். குழந்தையை மீட்ட ஒவ்வொரு வினாடியும் சினிமா படத்தில் வரும் திரில்லிங் காட்சி போன்று இருந்தது. அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்கும் காட்சியை மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டனர். இந்த காட்சிகள் அப்போது பெரும் வைரலானது.மேலும் இந்த வீடியோவை பார்த்தவர்கள், பலரும் குழந்தையின் தாய்க்கு எதிராக கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் குழந்தையின் தாய் ரம்யா, மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.இதையடுத்து ரம்யாவின் கணவர் வெங்கடேஷ், ரம்யாவுக்கு ஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காக காரமடை நகர் பகுதி, பெள்ளாதி சாலையில் உள்ள ரம்யாவின் பெற்றோர் வீட்டிற்கு சுமார் 10 நாட்களுக்கு முன் அழைத்து வந்துள்ளார். மேலும் அவர், மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் ரம்யாவின் தந்தை மற்றும் தாய் ஒரு திருமண விழாவுக்கு வெளியே சென்றனர். கணவரும் வெளியில் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் இரவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, ரம்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின் ரம்யாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், பின் அங்கிருந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றார். ஆனால், ரம்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து ரம்யா தற்கொலைக்கான காரணம் என்ன? மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் காரமடை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.