கோவை;''நல்ல கட்-ஆப் பெறும் மாணவர்கள் பலர், போதிய விழிப்புணர்வு இன்றி தரமற்ற கல்லுாரிகளை தேர்வு செய்து விடுகின்றனர். கல்லுாரி தேர்வில் கவனம் அவசியம்,'' என 'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்வில், கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசினார்.அவர் பேசியதாவது:பொதுவாக இன்ஜினியரிங் தேர்வு செய்வதில், 90 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதையும், 5 சதவீதம் பேர் உயர்கல்வி, 2 சதவீதத்தினர் தொழில் என்பதையும் இலக்காக கொண்டுள்ளனர்.அண்ணா பல்கலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில், கடந்த ஆண்டுகளில் கல்லுாரிகளின் செயல்பாடுகள், கல்லுாரி வேலைவாய்ப்பு, மாணவர்கள் எண்ணிக்கை, துறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளது. இதனை, உற்று கவனித்து சிறந்த கல்லுாரிகளை தேர்வு செய்யவேண்டும்.ஒரு தாளில், நாம் விரும்பும் கல்லுாரிகளின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, பட்டியலாக தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். நேரடியாக சென்று முன்னாள் மாணவர்களிடம் விசாரிக்க வேண்டும். தரவரிசை பட்டியல்கள், விளம்பரங்களை நம்பி கல்லுாரிகளை தேர்வு செய்ய கூடாது.சாய்ஸ் தேர்வு செய்வதில், மிகவும் கவனமாக செயல்படவேண்டும். நல்ல கட்-ஆப் பெறும் மாணவர்கள், போதிய விழிப்புணர்வு இன்றி தரமற்ற கல்லுாரிகளை தேர்வு செய்து எதிர்காலத்தை வீணாக்கி விடுகின்றனர். ஒரு மாணவர் எத்தனை சாய்ஸ் வேண்டுமானாலும் பட்டியலிட்டு கொள்ளலாம்.ஏ.ஐ., எம்.எல்., சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட அனைத்தும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் அடங்கியதே. பாடப்பிரிவு தேர்வில், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., ஏ.ஐ.டி.எஸ்., ஏ.ஐ. எம்.எல்., ஆகிய பிரிவுகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கலாம். தொடர்ந்து, இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக்கல், சிவில் என்ற வரிசையில், மதிப்பெண் அடிப்படையில் முக்கியத்துவம் அளித்து தேர்வு செய்யலாம்.சிறந்த கவனிக்கும் திறன் உள்ளவர்கள், வெற்றியாளர்களாக ஜொலிக்க முடியும். தவிர, புத்தகத்தையும், பெற்றோரையும் நேசிப்பவர்களை, யாராலும் தோற்கடிக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.