உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாய்லெட்டை பராமரிப்பது எப்படி அறிய ரூ.24.19 லட்சத்துக்கு டெண்டர்அறிக்கை தயாரிக்கவே இவ்வளவாம் கோவை மாநகராட்சியில் தீர்மானம்:அட கடவுளே!

டாய்லெட்டை பராமரிப்பது எப்படி அறிய ரூ.24.19 லட்சத்துக்கு டெண்டர்அறிக்கை தயாரிக்கவே இவ்வளவாம் கோவை மாநகராட்சியில் தீர்மானம்:அட கடவுளே!

கோவை:குப்பைக்கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் டீ, உணவு செலவுக்கு ரூ.27 லட்சம் செலவிட்ட தகவலே, புகைந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்குள் இதோ, மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவறைகளை சுத்தமாக பராமரிப்பது எப்படி என அறியவும், ஒரு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தயாரிக்க மட்டும், ரூ.24 லட்சம் ஒதுக்கி, கோவை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ள தகவல் வெளியாகி, 'அட கடவுளே' போட வைத்துள்ளது!கோவை மாநகராட்சியில், இரு நாட்களுக்கு முன் மாமன்ற கூட்டம் நடந்தது. அதில், ஒரே நேரத்தில் எவ்வித விவாதத்துக்கும் வாய்ப்பு கொடுக்காமல், 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் பற்றிய தீயை அணபை்பதில் ஈடுபட்ட, ஊழியர்களுக்கு டீ, உணவு செலவுக்காக ரூ.27 லட்சம் ஒதுக்கிய தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.இதோ அதே கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, மேலும் சில 'சரித்திர முக்கியத்துவம்' வாய்ந்த தீர்மானங்கள்:* துாய்மை பாரதம் (ஸ்வட்ச் பாரத்) 2.0 திட்ட நிதியில், பீளமேடு, கோவைப்புதுார் மற்றும் கவுண்டம்பாளையத்தில், 200 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பை மாற்று நிலையங்கள் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ஆலோசனை நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது; இந்நிறுவனத்துக்கு, 18 லட்சத்து, 29 ஆயிரத்து, 700 ரூபாய் வழங்க, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.* சித்தாபுதுார் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ரூ.72.10 லட்சம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.72.50 லட்சத்துக்கு 'ஸ்மார்ட் லேப்' அமைக்க, ஆரம்ப கல்வி நிதியில் ஒதுக்கப்பட்டிருக்கிறது.* கோவை மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு விடுதி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேரு ஸ்டேடியத்துக்கு எதிரே மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள, 88.59 சென்ட் நிலத்தை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு, 33 ஆண்டுகளுக்கு வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.* கோவை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு, 34 உடற்கல்வி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். வெளிமுகமை (அவுட்சோர்சிங்) முறையில், மதிப்பூதியமாக மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக, மாதம் ரூ.4.08 லட்சம் வீதம் ஒன்பது மாதங்களுக்கு ரூ.36.72 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.* தமிழ், வரலாறு, பொருளியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் நடத்த, 14 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மதிப்பூதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். இதற்காக, ஒன்பது மாதங்களுக்கு ரூ.2.52 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.* கோவை வ.உ.சி., பூங்காவுக்கு பொழுதுபோக்கிற்காக வரும் மக்கள் வாகனங்கள் நிறுத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மூன்று மணி நேரத்துக்கு ரூ.5, அதற்கு மேல் ரூ.10, நான்கு சக்கர வாகனங்கள் மூன்று மணி நேரத்துக்கு ரூ.10, அதற்கு மேல் ரூ.20 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பூங்காவை சுற்றி அமைக்கப்படும், 56 தரைக்கடைகளுக்கு மாத வாடகை ரூ.1,000 என உயர்த்தப்பட்டு உள்ளது. மற்ற ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.* கோவை மாநகராட்சி பகுதியில், சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய, ஒரு நாய்க்கு, 600 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தப்பட்டது; இத்தொகை ரூ.1,650 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.* கோவை மாநகராட்சியில் உள்ள பொது கழிப்பிடங்கள், சமுதாய கழிப்பிடங்களை துாய்மையாகவும், எளிதில் உபயோகப்படுத்தும் வகையிலும், பாதுகாப்பானதாகவும், நீடித்து உழைக்கும் வகையிலும் பராமரிப்பது தொடர்பாக, திட்ட அறிக்கை தயாரிக்க, ரூ.24.19 லட்சத்துக்கு சென்னை நிறுவனத்துக்கு, 'டெண்டர்' வழங்கப்பட்டிருக்கிறது.இவை போல், இன்னும் நிறைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் செலவிடுகின்றனர் என்பதை அறியும்போது, உடல் சிலிர்க்கிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி