| ADDED : மே 23, 2024 04:44 AM
கோவை: வைகாசி விசாகமான நேற்று, சிகப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, முருகர் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.வைகாசி விசாகம் முருகப்பெருமான் அவதரித்த நாளாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கிணைத்து, ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றியதாக ஐதீகம்.பங்குனி உத்திரம், தை பூசம், கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தை போல, வைகாசி மாத விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.வைகாசி விசாகத்திருநாளான நேற்று, சுக்கிவார்பேட்டை பாலமுருகன் கோவிலில் பாலதண்டாயுதபாணிக்கு அதிகாலை பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால், சிறப்பு மற்றும் சோடச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மஹாகணபதி மற்றும் சுப்ரமணிய ஹோமங்கள் நடந்தன.காலை, பாலதண்டாயுதபாணி தங்கக்கவச அலங்காரத்திலும், மாலை ராஜஅலங்காரத்திலும், உற்சவர் திருச்செந்துார் சுப்ரமணியசுவாமி அலங்காரத்திலும், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.இதே போல, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. முருக பெருமானை செந்நிற மலர்களால் அலங்கரித்து, கந்தசஷ்டி பாராயணம் செய்தனர்.