| ADDED : ஜூலை 31, 2024 02:21 AM
அன்னுார்;அன்னுார் அருகே பொன்னே கவுண்டன் புதூர் வழித்தடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி, தொழிற்சாலைகள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், உதவி மின் பொறியாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்த வழித்தடத்தில் மூன்று பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொன்னே கவுண்டன் புதூர் மக்கள் கூறியதாவது : திருப்பூரில் இருந்து அவிநாசி, கருமத்தம்பட்டி, கிட்டாம்பாளையம், பொன்னே கவுண்டன்புதூர், குன்னத்தூர், கரியாம்பாளையம் வழியாக இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழக பஸ் தற்போது இயங்குவதில்லை. இதே போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னுார், கரியாம்பாளையம், பொன்னே கவுண்டன் புதூர் வழியாக சூலூர் வரை இயங்கி வந்த தனியார் பஸ்ஸும் நிறுத்தப்பட்டு விட்டது. அவிநாசியில் இருந்து கருமத்தம்பட்டி, பொன்னே கவுண்டன் புதூர் வழியாக கோவில்பாளையத்துக்கு இயங்கி வந்த ஏ 10 அரசு டவுன் பஸ்ஸும் கொரோனாவுக்கு பிறகு இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் 30 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் எம்.எல்.ஏ.,விடமும் புகார் தெரிவித்துள்ளோம். எனினும் நடவடிக்கை இல்லை. இப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இரண்டு பஸ்கள் மட்டுமே வருகின்றன. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. அன்னுார் ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகை உள்ள ஊராட்சி மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி. இப்பகுதி மக்கள் பஸ் வசதி இல்லாமல் தவிக்கின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட மூன்று பஸ்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மக்கள் தெரிவித்தனர்.