| ADDED : ஏப் 04, 2024 11:58 PM
பொள்ளாச்சி:''டாஸ்மாக் மதுக்கடையை மூடுவதாக சொன்ன கனிமொழி மூன்று ஆண்டுகளாக துாங்குகிறரா; ஏன் நடவடிக்கை இல்லை,'' என, பொள்ளாச்சி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் கேள்வி எழுப்பினார்.பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியில், பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம் செய்தார். அவர், ஓட்டு சேகரித்து பேசியதாவது: கொரோனா தடுப்பூசி இலவசமாக போட்டு நமது உயிரை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. ரேஷன் கடைகளில், ஐந்து கிலோ அரிசி இலவசமாக வழங்குகிறார்.பொள்ளாச்சி பகுதி வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்பட வேண்டும். மெட்ரோ ரயில் மற்றும் அனைத்து ரயில்களும் வந்து செல்ல வேண்டும். பா.ஜ.,வால் மட்டுமே செயல்படுத்த முடியும்.ஒரு பக்கம் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது; மறுபக்கம் டாஸ்மாக் மதுகடைகள் தாராளமாக திறக்கப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவேன் என, ஊர் ஊராக சென்று எம்.பி., கனிமொழி பேசினார்.ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் ஏன் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவில்லை. கனிமொழி துாங்கி கொண்டுள்ளரா; ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. புதியதாக இந்த அரசு, எப்எல் 2 பார்களுக்கு அனுமதி கொடுத்து வருவது தான் சாதனையாக உள்ளது.இப்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி., எதுவும் செய்யவில்லை. என்னை வெற்றி பெறச் செய்தால், இத்தொகுதி வளர்ச்சி பெற அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை கொண்டு வருவேன்.இவ்வாறு, அவர் பேசினார்.