கோவை:வெள்ளலுார் குப்பை கிடங்கு விஷயத்தில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள பசுமை தீர்ப்பாயம், உரிய தீர்வு காண மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்கு சொந்தமாக வெள்ளலுாரில், 650 ஏக்கர் பரப்பளவில் கழிவுநீர் பண்ணை உள்ளது. இதில், 150 ஏக்கரில் கழிவு கொட்டப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிறது. இங்கு, 1,250 டன் வரையிலான குப்பை பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.இந்நிலையில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன், வெள்ளலுார் கிடங்கை மூடுமாறு கடந்த, 2013ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். கடந்த ஏப்., 6ம் தேதி குப்பை கிடங்கில், திடீர் தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டத்தால் சுற்றுப்பகுதியில், காற்று மாசடைந்தது.பத்திரிகைகளில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, டில்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு வழக்கை மாற்றி அமைத்தது.இவ்விரு வழக்குகள் இணைக்கப்பட்டு ஒன்றாக நடந்துவரும் நிலையில் கடந்த, 14ம் தேதி நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது,'வெள்ளலுார் கிடங்கில் திடக்கழிவுகளை கொட்டுவதால், அப்பகுதி மக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, குப்பை மேலாண்மைக்கென்று மாற்று இடத்தை தேர்வு செய்ய, பசுமை தீர்ப்பாயம் பரிந்துரை செய்கிறது.65 பரவலாக்கப்பட்ட குப்பை மேலாண்மை மையங்களை பல்வேறு இடங்களில் அமைப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, 36 மையங்களில்(எம்.சி.சி.,) தலா, 5 டன் அளவுக்கு பராமரிக்கும் வகையில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.'பழைய குப்பையானது, 12 மாதங்களில் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்து ஆறு ஆண்டுகளை கடந்துவிட்டது; பெரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. எனவே, குப்பை அழிப்பதற்கான திட்டங்கள், எடுக்கப்படும் நடவடிக்கைகள், அழித்து முடிக்கும் காலம் போன்ற விபரங்கள் எதுவும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை; அந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.தமிழக அரசின் நகராட்சி நிர்வாக முதன்மை செயலர், கோவை மாநகராட்சி கமிஷனருடன் கூட்டம் நடத்தி இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் செப்., 3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
'நம்பிக்கை தெரிகிறது!'
மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தாமல், மாநகராட்சி இழுத்தடித்து வந்தது. இந்நிலையில், தற்போதைய உத்தரவில் இருந்து குப்பை கிடங்கு பிரச்னைக்கு, விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது,'' என்றார்.