| ADDED : டிச 10, 2025 09:04 AM
வால்பாறை: சிறுவனை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய, நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். வால்பாறை அடுத்துள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ.,பங்களா குடியிருப்பு பகுதியில், அசாம் மாநிலத்தை சேர்ந்த ரோஜாவெல்லி - ஷாஜிதாபேகம் ஆகியோரின் இளயமகன் சைபுல்ஆலம்,5, கடந்த 6ம் தேதி இரவு, வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது, புதரில் மறைந்திருந்த சிறுத்தை சிறுவனை கவ்வி சென்று கொன்றது. இதனால், வால்பாறை எஸ்டேட் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர். இதனிடையே வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியாசாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித - வன விலங்கு மோதலை தடுக்க கூடுதல் முதன்மை தலைமை வனக்காப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது, என, தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக கடந்த, 7ம் தேதி மாலை பொள்ளச்சி சப்- கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திரகுமார்மீனா ஆகியோர் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதனிடையே, ஆட்கொல்லி சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்டறிய, சம்பவம் நடந்த அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிறுத்தை நடமாடும் பகுதியில் தொழிலாளர்கள் தங்களின் குழந்தைகளை மாலை நேரத்தில் வெளியில் செல்ல அனுமதிக்கூடாது. சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான பின், கூண்டு வைத்து பிடிப்பது குறித்து முடிவு செய்யப்படும்,' என்றனர்.