பொள்ளாச்சி;'தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ள தமிழக கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகள் சென்று வர பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்,' என, மலைவாழ் மக்கள் கூட்டமைப்பு, பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தியது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்நாள் கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார். பஸ் வசதி தேவை
'அம்பு வில் பழங்குடியினர் மலைவாழ் மக்கள் கூட்டமைப்பு' சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:திவான்சாபுதுார் ஊராட்சி, ஜெ.ஜெ., நகர், களத்துப்புதுார் ஆகிய இரு கிராமங்களில் மூன்று தலைமுறைகளாக வசிக்கிறோம். களத்துப்புதுாரில், ஆரம்ப பள்ளி உள்ளது. அங்கு இருந்து, உயர்கல்வி படிக்க திவான்சாபுதுார் செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல தினமும், நான்கு கி.மீ., நடந்து கோவிந்தாபுரம் நடந்து செல்ல வேண்டும். மழை காலங்களில் மிகுந்த சிரமமாக உள்ளது.பள்ளி செல்லவும், மற்ற போக்குவரத்துக்கும் பஸ் வசதியில்லை. இதனால், முதியோர், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றிய மக்களும் சிரமப்படுகின்றனர். வேறு வாகன வசதியும் இல்லை. தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் நிற்குமா?
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி அருகே, ஆர்.பொன்னாபுரத்தில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கின்றனர். கடந்த, 2020ம் ஆண்டு வரை '18ஏ' பஸ் பொள்ளாச்சி முதல் தேவம்பாடி வலசு வரை, ஆர்.பொன்னாபுரம் வழியாக இயக்கப்பட்டது. இரண்டு மினி பஸ்களும் இயக்கப்பட்டன.ஆனால், நரிக்குறவர் காலனியில் இரண்டு மினி பஸ்களும் சில நேரங்களில் மட்டுமே நின்று செல்கின்றன. பஸ்சில் ஏற அனுமதிப்பதில்லை. எனவே, தனியார் பஸ்கள், அரசு பஸ்கள், மினி பஸ்கள் நின்று செல்லவும், பஸ்சில் தடையின்றி பயணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று கொள்ளுப்பாளையத்திலும் பஸ்கள் நிறுத்தி இயக்க வேண்டும். இவ்வாறு, வலியுறுத்தியுள்ளனர். குவாரியில் வீதிமீறல்
தமிழக இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கொடுத்த மனுவில், 'தாளக்கரை ஊராட்சியில் உள்ள தனியர் கல்குவாரி பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. அதிக வெடி வைத்தல் உள்ளிட்ட விதிமீறல்களால் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறியுள்ளார். மக்கள் பாதிப்பு
ஊஞ்சவேலாம்பட்டி செல்வகணபதி நகர் குடியிருப்பு மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:செல்வகணபதி நகரில் தனியார் ஒர்க் ஷாப் உள்ளது. ஒர்க் ஷாப்பில், கிரில் வேலை செய்யும் போதும், இரும்பு கம்பிகளை தட்டும் போதும், இரும்புகளை வெட்டும் போதும் மிகுந்த சப்தம் ஏற்படுகிறது.இதனால், குடியிருப்பு மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதற்குரிய நடவடிக்கை எடுத்து, ஊராட்சி அனுமதியின்றி இயங்கும் ஒர்க் ஷாப்பை அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.