உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தார் கலவையால் விபத்து; ஆட்டோ டிரைவர் பலி: மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு

தார் கலவையால் விபத்து; ஆட்டோ டிரைவர் பலி: மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ரோட்டில் கொட்டப்பட்ட தார் கலவையால் ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ டிரைவர் இறந்தார். இதையடுத்து, ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சடையகவுண்டன்புதுாரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மணிகண்ட பூபதி, 44. இவர் நேற்று பொள்ளாச்சியில் பயணியரை இறக்கி விட்டு, காலை, 5:30 மணிக்கு ஊருக்கு சென்றார்.அப்போது, பல்லடம் ரோட்டில், ராசக்காபாளையம் அருகே ரோட்டில் கொட்டப்பட்ட தார் கலவையில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், மணிகண்டபூபதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.ஆட்டோ டிரைவர் இறப்புக்கு, தார் கலவையை ரோட்டில் அலட்சியமாக கொட்டியதே காரணம் என்றும், தார் கலவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்டோ டிரைவர்கள்,பொதுமக்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு வந்த, டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.பொதுமக்கள் கூறுகையில், 'பல்லடம் ரோட்டில் அமைக்கப்பட்ட வேகத்தடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கப்படாமல் உள்ளது. விபத்தை தவிர்க்க அமைக்கப்பட்ட வேகத்தடையால் விபத்து ஏற்படுகிறது.தற்போது, தார் கலவையே அஜாக்கிரதையாக ரோட்டில் கொட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் பேசுகையில், 'நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் கலவை கொட்டவில்லை. இது யார் கொட்டினர் என்பது குறித்து விசாரிக்கப்படும்,' என்றனர்.போலீசார் பேசுகையில், 'தார் கலவை கொட்டி விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.இதையடுத்து, இரண்டு மணி நேர மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க, காரப்பாடி பிரிவு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி