| ADDED : மார் 14, 2024 11:11 PM
அன்னுார்:
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க அறிவுரை
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க அறிவுரை
'தினமலர்' செய்தி எதிரொலியாக பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும்படி, பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த டிச. 18ம் தேதி முதல் பசும்பால் மற்றும் எருமை பாலுக்கு ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து ஜன. 31ம் தேதி வரை வழங்கப்பட்ட பாலுக்கு, பிப். 11-ம் தேதி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.அதன் பிறகு பிப். 1 முதல், மார்ச் 10 வரை வழங்கப்பட்ட பாலுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்கவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் (13ம் தேதி) செய்தி வெளியானது.இந்நிலையில், நேற்று அனைத்து தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும், சென்னை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை இயக்குனர் வினித் அனுப்பிய சுற்றறிக்கை : பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி நிதி ஆதாரம் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள், ஒவ்வொரு மாதமும், அனைத்து தொடக்கப் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் ஒன்றிய நிதியிலிருந்து 8ம் தேதிக்குள் ஊக்க தொகையை வழங்க வேண்டும்.அந்தத் தொகை இணையத்திடமிருந்து பெறப்பட்ட உடன் ஒன்றிய கணக்கில் ஈடு செய்து கொள்ளப்படும். நிதி ஆதாரம் உள்ள தொடக்கப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், ஒவ்வொரு மாதமும் தங்கள் சங்க நிதியில் இருந்து ஊக்கத்தொகையை பால் உற்பத்தியாளர்களுக்கு 8-ம் தேதிக்குள் வங்கி கணக்கில் வழங்க வேண்டும். இந்த வழிகாட்டி நெறிமுறைகளை தவறாது பின்பற்றி, பால் கொள்முதல் ஊக்கத்தொகை, பால் வழங்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சென்றடைவதை ஆய்வாளர்கள், விரிவாக்க அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில்,' இயக்குனர் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்ட பாலுக்கு, அதற்கு அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் தர வேண்டும் என இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுப்படி கடந்த மாதம் வழங்கிய பாலுக்கு சங்கங்கள் உடனே ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,' என்றனர்.