உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வயசானாலும் கம்பீரமும்... ஸ்டைலும் மாறல! அதிசயக்க வைக்கும் கும்கி கலீம்

வயசானாலும் கம்பீரமும்... ஸ்டைலும் மாறல! அதிசயக்க வைக்கும் கும்கி கலீம்

பொள்ளாச்சி;ஓய்வு பெற்றாலும், அதன் கம்பீரம் குறையாமல் கும்கியான கலீம் உள்ளதால், கோழிகமுத்தி முகாமிற்கு வரும் சுற்றுலா பயணியரின் தேடல் கலீம் ஆகத்தான் உள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில், கடந்த, 1956ம் ஆண்டு வரகளியாறு யானை முகாம் துவங்கப்பட்டது. தொடர்ந்து, 1975ம் ஆண்டு முதல் யானைகள் முகாம், பயிற்சி மற்றும் யானை பாதுகாப்பு மையமாக செயல்படுகிறது.கோழிகமுத்தி, வரகளியாறு யானை முகாம்களில் தற்போது, 27 பயிற்சி யானைகள் பராமரிக்கப்படுகின்றன.இந்த யானை முகாமிற்கு கடந்த, 1978ம் ஆண்டு டிச., 4ம் தேதி புது வரவாக, சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து பிடித்து வரப்பட்டது, தாயை பிரிந்து தவித்த ஏழு வயது யானை.தாயை பிரிந்து வந்த யானைக்கு, கலீம் என பெயர் சூட்டப்பட்டது. அதன்பின், பாகன் பழனிசாமி பராமரிப்பில் கும்கியாக மாற்றப்பட்டது. தற்போது, பாகனாக மணி உள்ளார்.கும்கியாக மாற்றப்பட்ட கலீம், பயிர் சேதம் செய்யும் காட்டு யானைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.காட்டு யானைகள் அட்டகாசம் செய்யும் இடங்களில், வனத்துக்குள் விரட்டுதல், கட்டுப்படுத்தி பிடிக்க கும்கி கலீமை கூப்பிட்டுங்க என சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றது.அதன் நடை, கம்பீரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்வதுடன், காட்டு யானைகள் ஆக்ரோஷத்தை கண்டு அச்சமடையாமல், அவற்றை அடக்கி ஆள்வதில் வல்லமை பெற்றது. எத்தனையோ கும்கிகள் இருந்தாலும், கலீம் இருந்தால், 'ஆப்ரேஷன் சக்சஸ்' எனலாம்.அந்தளவுக்கு, கலீம் சென்ற இடம் எல்லாம் யானைகள் அட்டகாசத்தை அடக்கியது. காட்டு யானைகள் வாசனையை மோப்பம் பிடித்தே அவற்றை நோக்கி நடந்து செல்லும். பாகனின் உத்தரவு வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும்.எத்தனை காட்டு யானைகளை அடக்கினாலும், யாரையும் இதுவரை எந்த தொந்தரவும் செய்யாமல் தனது பணியை மிகச்சிறப்பாக செய்யக்கூடிய கும்கியாக இருந்தது.கலீம் யானை பிடித்ததில், சின்னதம்பி, அரிசி ராஜா உள்ளிட்ட யானைகள் தற்போது, கும்கிகளாக முகாமில் உள்ளன. மொத்தம், 99 மீட்பு பணிகளில் ஈடுபட்ட கலீம், 60 வயதை கடந்ததும் கடந்தாண்டு வனப்பணியில் ஓய்வு பெற்றது.டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணியர் முதலில் காண விரும்புவதே கலீம் யானையை தான். 'எங்கே கலீம்' என கேட்டு அதன் அருகே நின்று போட்டோ எடுத்துச் செல்வதை இன்றும் காண முடிகிறது. மேலும், யானை பொங்கல் விழாவில் முதல் மரியாதை கலீம் யானைக்கு அளிக்கப்படும்.கலீமை காண்போர், 'வயசானாலும் அதன் கம்பீரம் குறையல' எனக்கூறுகின்றனர். கலீம் போல, தற்போது சின்னதம்பி, கபில்தேவ் உள்ளிட்ட யானைகள், மீட்பு பணிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. ஆனாலும், கலீம் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்கின்றனர் அனுபவம் வாய்ந்த பாகன்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை