கோவை : ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி பள்ளி மைதானம் எட்டு ஆண்டு போராட்டத்துக்கு பிறகு மீட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது, வீராங்கனைகளிடம் விளையாட்டில் சாதிக்கும் உத்வேகத்தை கூட்டியுள்ளது.கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 42 துவக்கப்பள்ளிகள், 11 உயர்நிலை, 14 நடுநிலை மற்றும், 17 மேல்நிலை என, 84 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுவதால், 2023-24ம் கல்வியாண்டில், 5,990 பேர் இப்பள்ளிகளில் கூடுதல் மாணவியர் சேர்க்கை புரிந்துள்ளனர். மைதானங்கள் இல்லை
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சர்வதேச ஹாக்கி மைதானம் பணிகள் துவங்கும் திட்டம், இன்னும் இழுபறியாகவே உள்ளது.அதேபோல், ஆர்.எஸ்.புரம், எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மாநகராட்சி பள்ளி விளையாட்டு மைதானத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன், நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே இம்மையம் செயல்பட்ட நிலையில், மைதானத்தை மீட்டுத்தருமாறு அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் கோரிக்கை விடுத்து வந்தனர். கல்விக் குழுவினர் தீர்மானம் நிறைவேற்றி, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீட்டு, நேற்று மீண்டும் பள்ளி வசம் ஒப்படைக்கப்பட்டது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மைதானத்தில் பள்ளி மாணவியருடன் இணைந்து, திறந்து வைத்தார்.இதனால், கேரம், பால் பேட்மின்டன் என பல்வேறு போட்டிகளில் மைதானமின்றியே, பதக்கங்களை குவித்த இப்பள்ளி மாணவியருக்கு, தற்போது கூடுதல் உத்வேகம் கிடைத்துள்ளது. இனி வரும் காலங்களில், கூடுதல் பதக்கங்களை இப்பள்ளியில் இருந்து எதிர்பார்க்கலாம்!பெருமை சேர்க்கணும்!மாநில அளவில் இப்பள்ளி மாணவியர் பதக்கங்கள் குவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. இச்சூழலில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த மைதானம் மீட்கப்பட்டுள்ளது.இன்னும் ஒரு வாரத்தில் விளையாட்டு அம்சங்கள் ஏற்படுத்தும் பணிகள் துவங்கப்படும். நிறைய வீராங்கனைகள் உருவாகி, மாநகராட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.-சிவகுரு பிரபாகரன்கோவை மாநகராட்சி கமிஷனர். மீட்பு தொடரும்!முதலாவதாக, இப்பள்ளியின் மைதானத்தை மீட்டுள்ளோம். கடந்தாண்டு நடந்த போட்டிகளில் இப்பள்ளி மாணவியர், 120 பதக்கங்கள் வென்றுள்ளனர். மைதானத்தில் இருக்கும் எம்.சி.சி., கட்டடம், உள்விளையாட்டு அரங்கமாக மாற்றப்படும். மற்ற மாநகராட்சி பள்ளிகளிலும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்.- மாலதி, மாநகராட்சி கல்விக்குழு தலைவர்.