| ADDED : ஜன 14, 2024 11:31 PM
அன்னுார்:வடக்கலூரில் பொங்கல் விழா நடத்த, அன்னுார் போலீசார் தடை விதித்துள்ளனர்.வடக்கலுாரில் உள்ள கோவிலில், ஒரே சமுதாயத்தில் குறிப்பிட்ட சிலரை மட்டும் அனுமதிப்பதில்லை என, கோவை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினரிடமும் கோவை வடக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் கடந்த ஓராண்டாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் விசேஷமாக கொண்டாடப்படும் மூன்று நாள் பொங்கல் திருவிழா நடத்த, அன்னுார் போலீசார் தடை விதித்துள்ளனர்.வடக்கலுார் நேரு இளைஞர் மன்றத்தின் அவைத்தலைவர் புருஷோத்தமன் மற்றும் கிராம மக்கள் கூறுகையில், 'எங்கள் ஊரில் 41வது ஆண்டாக இந்த ஆண்டு பொங்கல் விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம். எங்கள் ஊரை சொந்த ஊராகக் கொண்ட பலரும் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். பொங்கல் திருவிழாக்கு தங்கள் ஊருக்கு வந்து குடும்பத்துடன் விழாவில் பங்கேற்பார்கள். திருவிழாவில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த, நேரு யுவகேந்திராவிடம் அனுமதி பெற்றுள்ளோம்.சிறுவர், சிறுமியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள், பொங்கல் வைத்தல், சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் என, மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். தற்போது போலீசார் பொங்கல் விழா நடத்தக் கூடாது என்று கூறுவது வருத்தம் தருகிறது. தடையை நீக்கி பொங்கல் விழா நடத்த அனுமதிக்க வேண்டும்' என்றனர்.