உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நோட்டீஸ்களை முடித்து வைக்க கவனிப்பு! தொழில்துறையினர் குற்றச்சாட்டு

நோட்டீஸ்களை முடித்து வைக்க கவனிப்பு! தொழில்துறையினர் குற்றச்சாட்டு

கோவை; ஜி.எஸ்.டி., தொடர்பான நோட்டீஸ்களுக்கு உரிய கட்டணம், அபராதம் செலுத்திய பிறகும், 'கவனித்தால்' மட்டுமே வழக்குகளை முடித்துத் தருவோம் என,மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக, தொழில்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, பெயர் வெளியிட விரும்பாத தொழில்முனைவோர் சிலர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., தாக்கலில் 'மிஸ் மேட்ச்' இருப்பின், மென்பொருள் வாயிலாக கண்டறியப்பட்டு, வரி அலுவலர்கள் டிஜிட்டல் கையொப்பமிட்டு, சம்பந்தப்பட்ட தொழில்முனைவோருக்கு 'டி.ஆர்.சி.,01ஏ' நோட்டீஸ், ஆன்லைன் வாயிலாக அனுப்பப்படும். இதற்கு 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளித்து, செலுத்த வேண்டிய தொகையை செலுத்தினால், அபராதம் தள்ளுபடி செய்யப்படும். மத்திய, மாநில ஜி.எஸ்.டி.,க்கு தலா ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டிய அபராதத்துக்கு, இவ்வகையில் தள்ளுபடி பெறலாம்.சில சமயங்களில் தொகையை செலுத்திய பிறகும், சில நாட்களுக்குப் பின், டி.ஆர்.சி., 1 என்ற அடுத்த நோட்டீஸ் மீண்டும் வருகிறது. நாம்தான் எல்லாமே செலுத்தி விட்டோமே என பதறிப்போய், நேரில் சென்று வரி அலுவலரைச் சந்தித்து விளக்கம் அளித்தாலும், வழக்கை முடித்து 'ஆர்டர்' போடாமல் அலைக்கழிக்கின்றனர். வழக்கு நிலுவையில் இருப்பதாகத் தொடர்ந்து காட்டப்படுவதால், நமக்கு நோட்டீஸ் வந்து கொண்டே இருக்கும். இந்த மன உளைச்சலைத் தவிர்க்க, அந்த வரி அலுவலருக்கு அவர் 'எதிர்பார்ப்பதை' கொடுத்தே ஆக வேண்டும். ஏற்கனவே தொழில் செய்ய முடியாமல் நலிந்து வரும் குறு, சிறு தொழில்முனைவோர்களை தொழிலை விட்டு விரட்டும் அளவுக்கு, மாநில ஜி.எஸ்.டி., துறை நடந்து கொள்கிறது. மாதம் ஒரு முறை தொழில்துறையினருடன், கலந்தாய்வு கூட்டம் அறிவிக்கப்பட்டது. அதை நடத்தினால், முறையிட வசதியாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் புலம்பித்தீர்த்தனர்.

'என்னை அணுகினால்

நடவடிக்கை எடுக்கப்படும்'

தொழில்முனைவோரின் இந்த குற்றச்சாட்டு களை, கோவை வணிகவரித்துறை இணை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் பார்வைக்கு கொண்டு சென்றோம். அதற்கு அவர் கூறியதாவது: வழக்கின் தன்மையைப் பொறுத்தே, நோட்டீஸ் வழங்கப்படும். டி.ஆர்.சி., 1ஏ வழங்கி, அதில் கட்ட வேண்டியதை முழுமையாக செலுத்தி விட்டால், வழக்கு முடித்து வைக்கப்பட வேண்டும். ஒரு பகுதி தொகையை செலுத்தி விட்டு, மீதிக்கு ஆவணங்கள் சமர்ப்பித்து முறையிட்டால், அவ்வழக்கு முடிவடையாது. ஆனால், முழு தொகை செலுத்தப்பட்டிருந்தும், வழக்கை முடித்து வைக்காவிடில், தொழில்முனைவோர் நேரிலோ அல்லது 94451 95256 என்ற எண்ணிலோ, என் கவனத்துக்கு கொண்டு வந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை