உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 5 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில்...பெண்கள் ராஜ்ஜியம்!

5 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில்...பெண்கள் ராஜ்ஜியம்!

பொள்ளாச்சி, உடுமலை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, சட்டசபை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆண்களை விட, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, கடந்த, அக்., மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், பொள்ளாச்சி தொகுதியில், 2,23,829 வாக்காளர்கள்; வால்பாறை தனி தொகுதியில், 1,94,935; கிணத்துக்கடவு தொகுதியில், 3,30,720 வாக்காளர்கள் இருந்தனர்.தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன.இந்நிலையில், பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளுக்கு உட்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, பட்டியலை வெளியிட்டார். தாசில்தார்கள் ஜெயசித்ரா, சிவக்குமார், வாசுதேவன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள் சரவணன், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

இறுதி பட்டியல்

பொள்ளாச்சி தொகுதியில், ஆண்கள், 1,07,249; பெண்கள், 1,17,658; மற்றவர்கள், 39 என, மொத்தம், 2,24,946 வாக்காளர்கள் உள்ளனர். கிணத்துக்கடவு தொகுதியில், ஆண்கள், 1,63,894; பெண்கள், 1,71,498 மற்றவர்கள், 44 என, மொத்தம், 3,35,436 வாக்காளர்கள் உள்ளனர்.வால்பாறை தனி தொகுதியில், ஆண்கள், 93,443; பெண்கள், 1,03,038; மற்றவர்கள், 22 என, மொத்தம், 1,96,503 வாக்காளர்கள் உள்ளனர்.

சேர்ப்பு எவ்வளவு

பொள்ளாச்சி தொகுதியில், ஆண்கள், 2,227; பெண்கள், 2,880 பேர் என மொத்தம், 5,107 சேர்க்கப்பட்டனர். ஆண்கள், 1,994, பெண்கள், 1,994 பேர் என மொத்தம், 3,988 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.வால்பாறை தொகுதியில் ஆண்கள், 1,969; பெண்கள், 2,387 என மொத்தம், 4,356 பேர் சேர்க்கப்பட்டனர். ஆண்கள், 1,399, பெண்கள், 1,389 என, மொத்தம், 2,788 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.

உடுமலை

உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் வெளியிட, அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.உடுமலை தாசில்தார் சுந்தரம், தேர்தல் பிரிவு தாசில்தார்கள் சையதுராபியாம்மாள், வளர்மதி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.உடுமலை தொகுதியில், கடந்த, அக். 27ல், வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில், 1,23,862 ஆண்கள், 1,33,994 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 28 என, 2,57,884 பேர் இடம் பெற்றிருந்தனர்.சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் கீழ், 2,168 ஆண்கள், 2,652 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என, 4,824 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 932 ஆண்கள், 1,091 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என, 2,024 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில், 1,25,098 ஆண்கள், 1,35,555 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 2,60,684 வாக்காளர்கள் உள்ளனர்.

மடத்துக்குளம்

மடத்துக்குளம் தொகுதியில், வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில், 1,12,026 ஆண்கள், 1,17,691 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்தவர் என, 2,29,735 பேர் இடம் பெற்றிருந்தனர்.சுருக்க முறை திருத்தத்தின் கீழ், 1,750 ஆண்கள், 2,080 பெண்கள் என, 3,830 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். அதே போல், 672 ஆண்கள், 752 பெண்கள் என, 1,424 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில்,1,13,104, ஆண்கள், 1,19,019 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 18 பேர் என, 2,32,141 வாக்காளர்கள் உள்ளனர்.

பெண்கள் எவ்வளவு அதிகம்!

ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவு உள்ளனர். பொள்ளாச்சி தொகுதியில், ஆண்களை விட பெண் வாக்காளர்கள், 10,409 பேர் அதிகம். வால்பாறையில், 9,595, கிணத்துக்கடவில், 7,604 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.உடுமலை தொகுதியில், பெண் வாக்காளர்கள், 10,457 பேர் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.மடத்துக்குளம் இத்தொகுதியிலும், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள், 5,915 பேர் அதிகமாக உள்ளனர்.பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளதால், லோக்சபா தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதில் பெண்களின் பங்கு அதிகம் இருக்கும். அதனால், பெண்களை கவரும் வாக்குறுதிகளே அதிகம் இருக்கும்.

பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு!

வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்துக்கு உரிய விண்ணப்ப படிவம் பெறப்பட்டு அதன்படி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல், சப் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. பட்டியலில் பெயர் உள்ளதா என பொதுமக்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.வரும், ஏப்., 1ம் தேதியில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் புதியதாக பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்கள் நீக்கம் செய்வது தொடர்பாக, இணையதளம் வாயிலாக, பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, www.voters.eci.gov.inஎன்னும் இணையதளம் வாயிலாகவோ அல்லது, 'Voters Helpline App' என்னும் ஆன்ட்ராய்ட் செயலி வாயிலாக பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய மனுக்கள் பெறப்படும்.இவ்வாறு, கூறினார்.- நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி