1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
சாய்பாபாகாலனி போலீசாருக்கு, சங்கனுார் பள்ளம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, ரகசிய தகவல் கிடைத்தது. அங்குள்ள பழைய ரைஸ் மில் காம்பவுண்ட் அருகே, சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த, கணபதியை சேர்ந்த அமாமத்,25, பிரசாந்த்,27, ராஜேஷ்,26, வடவள்ளியை சேர்ந்த பிரதீப்,24 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனையிட்டபோது விற்பனைக்கு வைத்திருந்த, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வாகனங்கள் பறிமுதல்
பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டைடல் பார்க் அருகே பாதி கட்டிமுடிக்கப்பட்ட ரயில்வே பாலம் அருகே, நின்று கொண்டிருந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிஷோர்,24, புலியகுளத்தை சேர்ந்த சகாயராஜ்,40 ஆகியோரை சோதனையிட்டபோது, 200 கிராம் கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது. கார், டூவீலர், பவர் பாயின்ட் பேக், ஏர் டைப் கவர், ரூ.600 ரொக்கம் பறிமுதல் செய்ய,இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். குடிபோதையில் கத்திக்குத்து
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் நரேஷ்சகனி, 24. இவரும், இவரது உறவினருமான ராஜேஷ் ஆகியோர் ஆவாரம்பாளையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒரு வீட்டில் தங்கி கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் விக்ரம் என்பவரும்தங்கியுள்ளார்.இந்நிலையில் ஆவாரம்பாளையம், கொரத்தோட்டம் பகுதியில் நரேஷ்சகனி, ராஜேஷ் ஆகியோர் மது அருந்திக்கொண்டிருந்த போது, இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியில், நரேஷ்சகனின் வயிற்றில் குத்தி தப்பினார்.தகவல் அறிந்து வந்த விக்ரம், காயமடைந்தவரைமீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக, நரேஷ்சகனி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார், ராஜேசை தேடி வருகின்றனர். இளம்பெண் பலி
குனியமுத்தூர் அடுத்து சுகுணாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மனைவி பானுபிரியா, 27. கடந்த,22ம் தேதி மாலை ராபின்சன் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். குளியலறையில் பானுபிரியா நினைவின்றி கிடப்பதை கண்டார். அருகே வசிப்போர் உதவியுடன், மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி இரண்டாண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.