வீட்டில் நகை, பணம் திருட்டு
கணபதி: கோவை கணபதி எப்.சி.ஐ., ரோட்டை சேர்ந்தவர் ரெஜினி, 46. இவரது வீட்டில் கடந்த நவ., மாதம் ஆவாரம்பாளையத்தை சேர்ந்த தரணி, 40 என்பவர் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் வேலைக்கு சேர்ந்தது முதல் வீட்டில் சிறிது, சிறிதாக பணம் மற்றும் நகைகள் காணாமல் போயுள்ளது. கடந்த, 1ம் தேதி வீட்டில் இருந்த, 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருப்பது ரெஜினிக்கு தெரிந்தது. அதன்பின் தரணி வரவில்லை. அவர் மீது சந்தேகம் அடைந்த ரெஜினி, சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை கோவை: நீலிகோணாம்பாளையத்தில், நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆசிக் மற்றும் பாலாஜி ஆகியோர், பொங்கல் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத பத்திற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், இருவரையும் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த ஆசிக், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிங்காநல்லுார் போலீசில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர். புகார் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், விரைவில் மர்ம நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். -- பெண்ணை மிரட்டியவர் கைது
கோவை: கோவையை சேர்ந்த 18 வயது பெண், தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு, வேறொரு தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வரும் குனியமுத்துாரை சேர்ந்த பிரியன், 19, என்ற மாணவர் அறிமுகமானார்.பேசி, பேசி நாளடைவில் இருவரும் காதலிக்கத் துவங்கினர். மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். இதனால் அந்த மாணவி, பிரியனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.இந்நிலையில், பிரியன் அந்த மாணவிக்கு மொபைல் போனில் அழைத்து, அவர்கள் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் பிரியன், மாணவியின் கல்லுாரிக்கு சென்றார். இருவரும் சந்தித்து பேசினர். அப்போது பிரியன், அந்த மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார்.குனியமுத்துார் போலீசில் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, பிரியனை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர். பைக் மோதி ஒருவர் பலி
கோவை: காளியண்ணன்புதூர், வீரக்குலத்தான் காலனியை சேர்ந்தவர் சற்குணம்,54. தனியார் வங்கியில் இரவு நேர காவலாளி. நேற்றுமுன்தினம் இரவு, சற்குணம் கடைக்கு நடந்து சென்று விட்டு வீட்டுக்கு திரும்ப, நரசீபுரம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சாலையில், கிழக்கு நோக்கி அதிவேகமாக வந்த பைக் மோதியதில், சற்குணம் படுகாயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.