கோவை: கோவையின் புதிய அடையாளமாக, ரூ.208.50 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை, தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று திறந்து வைக்கிறார். கோவையில் 2010ல் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதல்வர் கருணாநிதி, காந்திபுரம் மத்திய சிறையை வேறிடத்துக்கு மாற்றி விட்டு, 'செம்மொழி பூங்கா' அமைக்கப்படும் என அறிவித்தார். உடனடியாக, நுழைவாயிலில் போர்டு வைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உயிரூட்டப்பட்டது. 2021, நவ., 22ல் கோவை வ.உ.சி., மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர், இரண்டு கட்டமாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, மொத்தமுள்ள 165 ஏக்கர் பரப்பளவில் முதல்கட்டமாக 45 ஏக்கரில் பூங்கா உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. 2023 டிச., 18ல், முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார். 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று திறக்கப்படுகிறது. 208.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இன்று முதல்வர் திறக்கிறார் தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத வகையில், அரிய வகை தாவரங்கள், செடி, கொடிகள், மர வகைகளுடன் செம்மொழி பூங்கா உருவாகியிருக்கிறது. பூங்காவை சுற்றிலும் 2.2 கி.மீ., துாரத்துக்கு நடைபயிற்சி செல்லும் வகையில், சுற்றுப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை பசுமை சுற்றுலா தலமாக உருவாக்கப்பட்டுள்ள, பூங்காவை திறந்து வைக்க, முதல்வர் ஸ்டாலின், இன்று கோவை வருகிறார். காலை 12:00 மணிக்கு கல்வெட்டு மற்றும் செயற்கை மலைக்குன்றை திறந்து வைத்து, ஏழு கடையேழு வள்ளல்களின் சிலைகளை பார்வையிடுகிறார். பின், பூங்காவை சுற்றிப்பார்க்கிறார். திறந்தவெளி அரங்கத்தில் கலைநிகழ்ச்சி நடக்கிறது. பள்ளி குழந்தைகள் மற்றும் வி.ஐ.பி.,களுடன் கலந்துரையாடுகிறார். 'லீ மெரிடியன்' ஹோட்டலில், மாலை 5:00 மணிக்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில், 43 ஆயிரத்து, 844 கோடி ரூபாய் முதலீட்டில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும், புதிய தொழில்களுக்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
'தினமலர்'செய்தியின் தாக்கமே செம்மொழி பூங்காவின் பிறப்பு
'
கோவை மாநகராட்சி பகுதி, கான்கிரீட் காடாக மாறி விட்டது. நகருக்கு மத்தியில் உள்ள மத்திய சிறையை புறநகருக்கு மாற்றி விட்டு, அவ்விடத்தில் பூங்கா உருவாக்க வேண்டும் என்பதை, தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த காலகட்டத்தில், நமது நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதையேற்ற கருணாநிதி, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நினைவாக, காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா உருவாக்கப்படும் என அறிவித்தார். தந்தையின் அறிவிப்பை இன்றைய தினம், தனயன் நிறைவேற்றி வைக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. அதற்கு அடித்தளமிட்டு, கோவை மக்களின் சார்பாக கோரிக்கையை முன்வைத்தது, 'தினமலர்' நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
140 வி.ஐ.பி.,களுக்கு தனிப்பட்ட கடிதம்
செம்மொழி பூங்கா திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக 140 வி.ஐ.பி., கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருக்கிறார். இக்கடிதம் சென்னையில் இருந்து விமானத்தில் நேற்று கோவை வந்தது. அழைப்பிதழ் மற்றும் விழா நடக்கும் வளாகத்தில் வாகனம் நிறுத்துவதற்கான 'பாஸ்' உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு, ஒவ்வொருவரின் வீட்டுக்கும் அரசுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
நிலுவை பணிகளை தொடர்ந்து செய்யணும்
செம்மொழி பூங்காவில், கண்ணாடி மாளிகைக்குள் குளிரூட்டப்பட்ட அறையில், வளரக்கூடிய செடிகள் வளர்க்கப்பட உள்ளன. கண்ணாடி பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதேபோல், பணம் செலுத்தி குழந்தைகள் விளையாடும் பகுதியில் ராட்டினங்கள் அமைக்கும் பணி முழுமையடையவில்லை. டிக்கெட் கவுன்டர் வழங்கும் கட்டடத்தில், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கேம்ஸ், ஏ.ஆர்., வி.ஆர்., ஆய்வகங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒரே நேரத்தில் 1,000 பேர் அமரக்கூடிய அரங்கம் கட்டும் பணி முழுமையாக முடியவில்லை. சிறைத்துறை டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., தங்கியிருந்த பழமையான பங்களாக்கள் இருக்கின்றன. அவற்றின் வெளிப்புறத்துக்கு வர்ணம் மட்டும் பூசப்பட்டிருக்கிறது. அக்கட்டத்தை பழமை மாறாமல் புதுப்பித்து குழந்தைகளுக்கான அம்சங்களை உருவாக்க வேண்டும். விழா முடிந்ததும் சுணங்கி விடாமல், குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் செய்து முடிக்க வேண்டும்.
தாவரங்களின் சிறப்பை ஒலி வடிவில் கேட்கலாம்!
செம்மொழி வனம், மூலிகை வனம், மகரந்த தோட்டம், பாலைவனத்தோட்டம், மூங்கில் தோட்டம், ரோஜா தோட்டம் என, 23 விதமான தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழை நீர் வடிகால் அமைப்பு 2 கி.மீ., நீளத்துக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. மரங்கள் மற்றும் தாவரங்களை பற்றி அறியும் வகையில், 'க்யூஆர்' கோடு மற்றும் 'பார்' கோடு வசதியுடன் கூடிய பெயர் பலகை வைக்கப்படும். 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்தால், அதன் சிறப்பை ஒலி வடிவில் கேட்கலாம்.