கோவை:கவுன்சிலர்களின் ஒத்துழைப்பு இல்லாததால், செலக்கரிச்சல் ஊராட்சி தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது செலக்கரிச்சல் ஊராட்சி. அ.தி.மு.க.,வை சேர்ந்த மரகதவடிவு, தலைவராக உள்ளார்.கடந்த டிச., 7ம் ஊராட்சி மன்ற கூட்டம் நடத்தியபோது, 56 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 17 தீர்மானங்களில் கூறப்பட்டுள்ள செலவினங்களில் சந்தேகம் இருப்பதாகவும், அதுதொடர்பாக விவாதிக்க வேண்டுமெனவும், கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதை, ஊராட்சி தலைவர் ஏற்கவில்லை.அதனால், தி.மு.க.,வை சேர்ந்த, 4வது வார்டு கவுன்சிலர் சிவராஜ் தலைமையில், புஷ்பா (1வது வார்டு), கிருஷ்ணவேணி (2வது வார்டு), என்.ஆறுச்சாமி (5வது வார்டு), கே.ஆறுச்சாமி (8வது வார்டு) ஆகிய ஐந்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பஷீர் அகமது, சுல்தான்பேட்டை பி.டி.ஓ., விஜயகுமார் ஆகியோர் பேச்சு நடத்தினர். அப்போது, செலவினங்கள் தொடர்பான, 17 தீர்மானங்கள் குறித்து விவாதித்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.இப்பிரச்னை, கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊராட்சி தலைவருக்கு கவுன்சிலர்களிடம் உள்ள ஆதரவு மற்றும் ஊராட்சி நிர்வாகம் சீராக செயல்படுவதை உறுதி செய்ய, சிறப்பு கூட்டம் நடத்த அறிவுறுத்தினார்.அதன்படி, 11ம் தேதி சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஊராட்சிகளின் உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதில், தலைவர், துணை தலைவர் (7வது வார்டு), 3, 6, மற்றும், 9வது வார்டு கவுன்சிலர்கள் ஓர் அணியாகவும், 1,2,4,5 மற்றும், 8வது வார்டு கவுன்சிலர்கள் ஓர் அணியாகவும் செயல்பட்டு, ஊராட்சி நிர்வாகத்தை சீராக செயல்படுத்துவதற்கு, ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது தெரியவந்தது.அதனால், ஊராட்சி தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே போதுமான ஒத்துழைப்பு இல்லாமல், கடமையை செய்யாமல் இருப்பதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (கிராம ஊராட்சி) முதல்நிலை கையெழுத்திடும் அதிகாரமும், செலக்கரிச்சல் ஊராட்சியின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு இரண்டாம் நிலை கையெழுத்திடும் அதிகாரமும் வழங்கி, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.