உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுயத்தை யாரும் கற்றுக் கொடுக்க முடியாது :ஓவியக்கண்காட்சியில் ஒலித்த குரல்கள்

சுயத்தை யாரும் கற்றுக் கொடுக்க முடியாது :ஓவியக்கண்காட்சியில் ஒலித்த குரல்கள்

கோவை :''ஆர்ட்'க்கும் 'கிராப்ட்'டுக்கும் நிறைய இடைவெளி உண்டு; 'கிராப்ட்' பிரதி எடுப்பது; 'ஆர்ட்' சுயம்; சுயத்தை யாரும் யாருக்கும் கற்றுக் கொடுக்க முடியாது. இலக்கை கை காட்டுவதுதான் ஆசிரியரின் பணி; ஆசிரியரால் அங்கு போக முடியாது. அதை நோக்கி பயணிப்பதும், இலக்கை அடைவதும் மாணவனின் பயிற்சியையும் முயற்சியையும் பொறுத்தது,'' என்று கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி விரிவுரையாளர் அருளரசன் பேசினார். கஸ்தூரி சீனிவாசா அறக்கட்டளை சார்பாக, 'உயிரோவியம்-2011' என்னும் பொதுத் தலைப்பின் கீழ், தொடர் ஓவிக் கண்காட்சிகள் நடக்கின்றன. இதில், 'அகமும் புறமும்' என்னும் துணைத் தலைப்பில் ஓவியர் பாலசண்முகம் வரைந்த கோட்டோவியங்கள் மற்றும் மர சிற்பங்களின் கண்காட்சி, கஸ்தூரி சீனிவாசா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது. விரிவுரையாளர் அருளரசன் கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது: விவசாயி, ஒரு விதையை நடும் முன், அதை பல விதங்களில் பண்படுத்திய பின் அதை குழியில் போட்டு மூடுவார். பார்ப்பதற்கு இது சித்திரவதை போல் தெரியலாம்; அப்படிச் செய்தால்தான் விதை மரமாகும்; ஆசிரியரின் பணியும் இதைப் போன்றதே. நாங்கள், பயிற்சிகளின் மூலம் பண்படுத்திய விதைகளை இச்சமூகத்தில் நட்டாலும், அனைத்து விதைகளும் முளைத்து விடுவதில்லை. நான் நட்டதில், பாலசண்முகம் என்னும் விதை இன்று வளர்ந்து விருட்சமாகியுள்ளது. இது இடைவிடாத தேடலின் காரணமாக இவருக்குள் கிளர்ந்தெழுந்த சுயத்தால் கிடைத்த வெற்றி. 'ஆர்ட்'க்கும் 'கிராப்ட்'டுக்கும் நிறைய இடைவெளி உண்டு; 'கிராப்ட்' பிரதி எடுப்பது; 'ஆர்ட்' சுயம். சுயத்தை கற்றுக் கொடுக்க முடியாது. இலக்கை கை காட்டுவதுதான் ஆசிரியரின் பணி. இவ்வாறு, அறிவரசன் பேசினார். ஓவியர் பாலசுந்தரம் கூறியதாவது: சாதாரணமாக சிறுவயதில் மையை காகிதங்களில் தடவி அல்லது தெளித்து காகிதத்தை மடித்து சில வடிவங்களை உருவாக்குவோம். அப்படி உருவாக்கிய ஒரு வடிவத்தை அடிப்படையாக வைத்துதான், இங்குள்ள ஓவியங்களை வரைந்துள்ளேன். ஓராண்டு காலம் இப்பணியில் ஈடுபட்டு, 3000 பக்கங்கள் வரைந்து அதில் தேர்வு செய்த 300 பக்கங்களை இங்கு காட்சிக்கு வைத்துள்ளேன். ஒரு பொருள் என்பது ஒன்றல்ல; அது பல பொருட்களாக உள்ளது என்பது 'டைமண்சனிசம்'. ஒரு பொருளில் இருக்கும் பல பொருட்களை 'டைமண்சனிச' ஓவியன்தான் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். அப்படி ஒரு முயற்சிதான் இது. இவ்வாறு, அவர் கூறினார். கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி விரிவுரையாளர் சிவராம கிருஷ்ணன், கண்காட்சி அமைப்பாளர் குப்புராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி