| ADDED : டிச 03, 2025 06:46 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பருவமழையை எதிர்கொள்வது குறித்துதீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தீயணைப்புத்துறை வாயிலாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முதலுதவி, பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் பிரகாஷ், மாணவர்கள் பாதுகாப்பு அறிவு பெறுவதன் அவசியம் குறித்து விளக்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் கணபதி தலைமையில், விழிப்புணர்வு, பருவமழை நேரத்தில் எவ்வாறு எதிர்கொள்வது குறித்து, முதலுதவி செய்யவது, தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர். வீடு மற்றும் பள்ளியில் தவறான மின்சார பயன்பாட்டால் ஏற்படும் அபாயங்கள், அவசர கால எண்கள், உடனடி தகவல் அளிக்கும் முறைகள், காயம், மூச்சுத்திணறல், மயக்கம் போன்ற பொதுவான அவசர நிலைகளில் செய்ய வேண்டிய மருத்துவ முதலுதவி குறித்து விளக்கப்பட்டது. தீ அணைக்கும் கருவிகளின் பயன்பாடு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.