உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசு பஸ்களை சுத்தம் செய்ய முடியாமல் திணறல்: குறைந்த கூலியால் சிக்கல்

 அரசு பஸ்களை சுத்தம் செய்ய முடியாமல் திணறல்: குறைந்த கூலியால் சிக்கல்

பொள்ளாச்சி: அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணிக்கு, பணியாளர்கள் கிடைக்காததால், போக்குவரத்து துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சியில் உள்ள மூன்று பணிமனைகளில் இருந்து, தினமும், டவுன் மற்றும் மொபசல் பஸ்கள் என, 180க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான பஸ்களின் உட்புறம் சுத்தமில்லாமல் உள்ளன. தின்பண்டங்களின் காலி பாக்கெட், சாக்லெட் கவர், காகிதம், பிளாஸ்டிக் பாட்டில் என, குப்பை நிறைந்தே காணப்படுகிறது. பணிமனையில் நிறுத்தப்படும் பஸ்களின் உள் மற்றும் வெளிப்புறம் சுத்தம் செய்ய, தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், இப்பணியை செய்ய, யாரும் முன்வருவதில்லை. தொழிலாளர்களுக்கு, ஒரு பஸ்சை சுத்தம் செய்தால், 35 ரூபாய் மட்டுமே, அரசின் சார்பில், கூலி வழங்கப்படுகிறது. அதன்படி, ஒருவருக்கு 8 பஸ்கள் வரை, சுத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பெரும்பாலான பஸ்கள் இரவு, 11:00 மணிக்கு மேல் தான் பணிமனைக்குள்வரும் என்பதால், நள்ளிரவு, 12:00 மணி முதல், அதிகாலை, 5:00 மணி வரை தான் பஸ்களை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தினசரி, 10 பஸ்களை சுத்தம் செய்தால் கூட, 350 ரூபாய் மட்டுமே கிடைக்கும் என்பதால், யாரும் இப்பணிக்கு வரமாட்டார்கள். எனவே, அரசு, கூலித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இல்லையெனில், தனியாக கேரேஜ் அமைத்து, இயந்திரம் வாயிலாக தானாக தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பஸ்களை சுத்தம் செய்ய பணியாளர்கள் கிடைக்காததால், பஸ்கள் சுத்தம் செய்யும் பணி கேள்விக் குறியாகத்தான் உள்ளது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை