உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில அளவில் அதிக வழக்கு பதிவு

மாநில அளவில் அதிக வழக்கு பதிவு

பொள்ளாச்சி: மாநில அளவில் அதிக வழக்குகள் பதிவு செய்த, பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கு, மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா ஆகியோர் உத்தரவின் பேரில், எஸ்.பி., பாலாஜி சரவணன், டி.எஸ்.பி., மரியமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா ஆகியோர், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்த அறிவுறுத்தினர்.அதன்படி, பறக்கும் படை தனி தாசில்தார்கள் முத்துமாணிக்கம், முத்துக்குமார், பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், எஸ்.ஐ.,க்கள் பிரபு, பாரதிராஜா, பூங்கொடி மற்றும் போலீசார், கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டனர்.கடந்த ஓர் ஆண்டில், 430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 151.79 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதில், இருசக்கர வாகனங்கள் - 183, மூன்று சக்கர வாகனங்கள் - 2, நான்கு சக்கர வாகனங்கள் - 56 என, மொத்தம், 241 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநில அளவில் முதலிடம் பிடித்தது. மேலும், ரேஷன் அரிசியை தொடர்ந்து கேரளாவுக்கு கடத்திய ஒன்பது பேரை கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டதில், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது.நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில், 109 வழக்குகள் முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்ததற்கு மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது.தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த பொள்ளாச்சி யூனிட் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி., சீமா அகர்வால் வழங்கினார்.இதையடுத்து, மாவட்ட கலெக்டரை, போலீசார் சந்தித்தனர். அவர்களை கலெக்டர் கிராந்திகுமார் பாராட்டி, இதுபோன்று தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ