மேட்டுப்பாளையம்: தமிழக அரசு நடமாடும் கால்நடை மருந்தக மருத்துவ ஊர்தி திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் வாயிலாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தாலுகாவிற்கு ஒரு வாகனத்தை கொடுத்துள்ளது. அதில், ஒரு டாக்டர், உதவியாளர், டிரைவர் ஆகியோருடன் தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்படுகிறது. இவர்கள் கிராமங்கள் தோறும் சென்று, கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். இத்திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன், மாடுகள், ஆடுகளுக்கு உடல் நலம் பாதித்தால், உரிமையாளர்கள் அருகே உள்ள கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு செல்வர். பல கறவை மாடுகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, கால்நடை மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தனர். கால்நடை மருந்தக மருத்துவ ஊர்தியால், விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் தாலுகாவில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியில் பணியாற்றும் டாக்டர் கவுசல்யா கூறுகையில், 'வாரத்தில் ஆறு நாட்களில், ஒரு நாளைக்கு இரண்டு கிராமங்களுக்கு சென்று, கால்நடைகளை பரிசோதனை செய்து வருகிறோம். உடல்நலம் பாதித்து இருந்தால், ஊசி போட்டு, மருந்து மாத்திரைகள் கொடுத்து, கால்நடைகளை பராமரிப்பது குறித்து அறிவுரையும் கூறி வருகிறோம். ஞாயிற்றுக் கிழமையில் அவசர சிகிச்சைக்கு செல்கிறோம். ஒரு மாதத்தில் ஆடுகள், மாடுகள், கோழிகள், நாய்கள் என, 800 லிருந்து 1000 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம்,' என்றார். இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,' வாரந்தோறும் கால்நடை டாக்டர் குழு, வீடுகள் மற்றும் விவசாய தோட்டங்களுக்கு வந்து கால்நடைகளை பரிசோதனை செய்கின்றனர். உடல் நலம் பாதித்துள்ள கால்நடைகளுக்கு, ஊசி போட்டு, மருந்துகள் கொடுத்து, எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை கூறுகின்றனர். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.' என்றனர்.