| ADDED : ஜன 19, 2024 11:40 PM
வால்பாறை:வால்பாறையில், 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மழைப்பொழிவு குறைந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், தேயிலை செடிகள் ஒரு வகையான கொசு தாக்குதலால், செடிகள் துளிர்விட முடியாமல் பட்டுபோய்விடுகிறது. இதை தடுக்க எஸ்டேட் நிர்வாகம் சார்பில், தேயிலை செடிகளுக்கு மத்தியில் மஞ்சள் ஒட்டுப்பொறி வைக்கப்பட்டுள்ளது. தேயிலையை தாக்க வரும் கொசுக்கள் இந்த அட்டையில் சிக்கினால், அவற்றின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும்.தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'கொசு தாக்குதலில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க, உபாசி தேயிலை ஆராய்ச்சியாளர்களின் அறிவுரையின் படி, மஞ்சள் நிற ஒட்டுப்பொறி வைக்கப்பட்டுள்ளது.தேயிலை செடிகளை தாக்க வரும் கொசு இந்த ஒட்டுப்பொறியில் ஒட்டிக்கொள்ளும். மேலும் செடிகளை கொசுவின் பிடியிலிருந்து பாதுகாக்க தேயிலை செடிகளை சுற்றிலும் துணியால் வேலி அமைத்து பாதுகாத்து வருகிறோம்,' என்றனர்.