| ADDED : ஜன 30, 2024 12:41 AM
திருப்பூர்;சந்தன மற்றும் செம்மர விவசாயிகள் நலன் காக்கும் விதமாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தில் உள்ள சந்தன மர விளைச்சல் செய்யும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தார்.விவசாய விளைநிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரத்தை, விவசாயிகள் நேரடியாக சந்தைப்படுத்துவதில் உள்ள சட்ட சிக்கல், வளர்ப்பு அனுபவம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், சந்தன மரம் தீர்வுகளுக்கான குழுவில் செம்மரம் வளர்ப்போரையும் இணைத்து, 'தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க,' துணை அமைப்பாக, 'சந்தன மரம் மற்றும் செம்மர விவசாயிகள் அணி' ஏற்படுத்துவது.விவசாய நிலத்தில் வளர்க்கப்படும் சந்தனம் மற்றும் செம்மரங்களை விவசாய உற்பத்தி என்ற வரையறைக்குள் மத்திய - மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும், விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் சந்தனம் - செம்மரங்களுக்கு வனத்துறை சட்டங்களிலிருந்து விலக்களித்து, வேளாண்மை துறையின் கீழ் கொண்டு வந்து, மரம் வாரியம் (Timber Board) உருவாக்கப்பட்டு மர வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.உலகம் முழுவதும் அதிகளவில் சந்தனம் ஏற்றுமதி செய்த நமது நாடு, இன்று அதனை ஆஸ்திரேலியாவிடம் இழந்துள்ளது. அதைமீட்டு, மீண்டும் சந்தனம் மற்றும் அதன் மதிப்பு கூட்டிய பொருள் ஏற்றுமதியில், முன்னிலை பெற வேண்டும். இதனை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர்ச்சியாக அரசுக்கு மனு அளிப்பது, பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து சமரசம் இன்றி போராடி கோரிக்கைகளை அடைவது என தீர்மானிக்கப்பட்டது.