கோவை: அதிவேகத்தில் வளரும் கோவையின் சாலைக் கட்டமைப்பில் போதிய கவனம் செலுத்தாத அரசுகளால், நகரம் நெரிசலில் திணறி வருகிறது. கோவையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2020ல் 23 லட்சத்து 77 ஆயிரத்து 904. இது, 2019ல் 22 லட்சத்து 77 ஆயிரத்து 814 ஆக இருந்தது. ஒரே ஆண்டில் 1 லட்சம் வாகனங்கள் அதிகரித்துள்ளன. 2016ல் 19 லட்சத்து 3,910 ஆக இருந்த வாகனங்கள், நான்கு ஆண்டுகளில் 4.74 லட்சம் அதிகரித்துள்ளன. சராசரியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் கூடுதலான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வளர்ச்சி வேகத்தைக் கணக்கிட்டால், தற்போது 30 லட்சத்துக்கும் கூடுதலான வாகனங்கள் கோவையில் உள்ளன. ஆனால், இவ்வளவு வாகனங்களைக் கையாளும் அளவுக்கு, கோவையின் சாலை உட்கட்டமைப்பு இல்லை. கோவையின் பொருளாதார வளர்ச்சி, தொழில்வளர்ச்சி, மக்கள்தொகை பெருக்கம், கோவை சுற்றுப்பகுதிகளின் நகர்மயமாகும் வேகம், இவற்றையெல்லாம் கணக்கிட்டால், சாலை உட்கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியம். ஏற்கனவே, கோவை சாலை விபத்துகளின் தலைநகரமாக மாறி வருகிறது. போதாக்குறையான சாலை உட்கட்டமைப்பு இதற்கு முக்கிய காரணம். பாதுகாப்பு, உயர்வான வாழ்க்கைத் தரத்தை எதிர்நோக்கும் கோவையில், சாலை உள்கட்டமைப்பை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள்
* செங்கப்பள்ளி - சேலம் விரைவுச் சாலை (100 கி.மீ.,) அகலப்படுத்த வேண்டும். * கோவை கரூர் பசுமை வழிச்சாலை (120 கி.மீ.,) * கோவை பை பாஸ் சாலையை ஆறு வழிச்சாலையாக்க வேண்டும். *உப்பிலிபாளையம் ரவுண்டானா மேம்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும். *டெக்ஸ்டூல் -குரும்பபாளையம் சாலை விரிவுபடுத்தப்பட வேண்டும். *சாய்பாபா காலனி மேம்பாலம், பெ.நா., பாளையம் மேம்பால திட்டங்களை தேவைக்கேற்ப விரிவுபடுத்த வேண்டும். *சிங்காநல்லூர் மேம்பால பிரச்னை, காரணம்பேட்டையில் மேம்பாலம் ஆகியவற்றுக்கு உடனடி தீர்வு தேவை. *பொள்ளாச்சி சாலையில், சுந்தராபுரம் மற்றும் மலுமிச்சம்பட்டியில் மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். * கிழக்குப் புறவழிச்சாலை, மேற்குப் புறவழிச்சாலை, மருதமலை ரோடு விரிவாக்கம், லாலி ரோடு மேம்பாலம் ஆகிய பணிகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.