| ADDED : ஜூலை 25, 2024 10:54 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் ஊடுருவுவதை தடுக்க, விவசாயிகள் தொங்கும் நெருக்கமான கம்பிவேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களை ஒட்டியுள்ள வேளாண் நிலங்களில் காட்டு யானைகளின் ஊடுருவலை தடுக்க, விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வன எல்லைகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் காவல் பணியில் ஈடுபட்டு, யானைகளை திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இருந்தாலும், காட்டு யானைகளின் வரவை முழுமையாக தடுக்க இயலவில்லை. இதனால் காடுகளில் இருந்து தினசரி இரவு வெளியேறும் யானைகள், மலையோர கிராமங்களில் உள்ள வேளாண் நிலங்களில் உள்ள பயிர்களை உண்டு பசியாறி விட்டு, ரேஷன் கடை, வீடுகள் உள்ளிட்டவைகளில் வைக்கப்பட்டிருக்கும் உப்பு, காய்கறி, அரிசியை சுவைக்க தொடங்கி விடுகின்றன. சின்னதடாகம் வட்டாரத்தில் தினசரி இரவு காட்டு யானைகள் ஊடுருவி வேளாண் பயிர்களை நாசம் செய்கின்றன.இது குறித்து, விவசாயிகள் கூறுகையில்,' வனவிலங்குகள் மனித வசிப்பிடங்களுக்குள் நுழைவதை தடுக்க இரும்பு கம்பி வட வேலிகள், கற்சுவர் வேலிகள், சூரிய மின்வேலிகள், யானை புகா அகழிகள், பேட்டரி மின் வேலிகள், தொங்கும் சூரிய மின்வேலிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், வனப்பகுதிக்குள் தீவனப்பயிர்கள் ஆதாரங்கள் உருவாக்குதல், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாயிலாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இவை எல்லாம் மீறி யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன.யானைகள் தோட்டங்களுக்குள் போவதை தடுக்க தற்போது தொங்கும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஓரளவு யானைகளின் வரவை தடுக்க உதவுகிறது' என்றனர்.