மேட்டுப்பாளையம்;ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள் வழங்கி, எட்டு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் உபயோகப்படுத்த முடியாமல் உள்ளது. டிராக்டர்களுக்கு நெம்பர் வழங்கவும், அதை இயக்கவும், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், ஓடந்துறை, தேக்கம்பட்டி, மருதூர், வெள்ளியங்காடு, சிக்கதாசம்பாளையம், பெள்ளேபாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி உள்பட,17 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சிக்கதாசம்பாளையம், மருதூர், தேக்கம்பட்டி, ஆகிய மூன்று ஊராட்சிகள், பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரியதாகும்.தமிழக அரசு, ஊராட்சிகளின் மக்கள் தொகை அடிப்படையில், குப்பைகளை எடுத்துச் செல்வதற்கு, டிராக்டர்கள் வழங்கி உள்ளது. அதன்படி காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. சில ஊராட்சிகளுக்கு இரண்டு டிராக்டர்கள், டிரெய்லர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டிராக்டர்கள், இன்னும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள் வழங்கி எட்டு மாதங்கள் ஆகியும், இன்னும் ரெஜிஸ்டர் செய்து நெம்பர் வாங்காமல் உள்ளது. அதனால் அந்தந்த ஊராட்சி அலுவலக வளாகத்தில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் நிறுத்தி உள்ளதால், பேட்டரி உபயோக படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சக்கரத்தில் காற்று குறைந்ததால், புதிய டயராக இருந்தாலும் அதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால் ஊராட்சி நிதியும் வீணாகியதோடு, டிராக்டர்கள் நிறுத்தி வைத்துள்ளதால், யாருக்கும் பயனில்லாமல் உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய, ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் மற்றும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.டிராக்டர்களை ஓட்டுவதற்கு, டிரைவர்கள் எவ்வாறு நியமனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு கொடுக்க வேண்டும். டீசல் அளவு என்ன. அதற்கு உரிய தொகை எவ்வளவு என்ற விவரங்கள் ஏதும், ஊராட்சிகளுக்கு வழங்கவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள, பல்வேறு ஊராட்சிகளில் புதிய டிராக்டர்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.எனவே, மாவட்ட கலெக்டர், ஊராட்சிகளுக்கு வழங்கிய டிராக்டர்களின் நிலையை ஆய்வு செய்து, உடனடியாக நம்பர் வழங்கவும், அதை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஊராட்சித் தலைவர்கள் கூறினர்.