| ADDED : நவ 19, 2025 04:05 AM
பொள்ளாச்சி: அங்கன்வாடி மையங்களில் புதிதாக சேரும் குழந்தைகளுக்கு அடுத்தாண்டு தான் சீருடைகள் வினியோகிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 400க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. நடப்பாண்டில் இந்த மைய குழந்தைகளுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு குழந்தைக்கு இரண்டு செட் வீதம், ஒவ்வொரு மையத்துக்கும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், புதிதாக சேரும் குழந்தைகளுக்கும் சீருடை வழங்க வேண்டும் என, பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறுகையில், 'இரண்டு ஆண்டுகளுக்கு பின், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளது. சீருடை எண்ணிக்கை குறித்த விபரங்கள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே ஜூன் மாதம் சீருடை வழங்கப்பட்டது. அங்கன்வாடிகளில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு உடனடியாக சீருடை வழங்க இயலாது. அடுத்த ஆண்டு தான் சீருடை வழங்கப்படும்,' என்றனர்.