பொள்ளாச்சி : 'பொள்ளாச்சியில், கோர்ட் உத்தரவுக்கு எதிராக, கோவிலை இடிப்பதற்காக அளித்த நோட்டீைஸ திரும்ப பெற வேண்டும்,' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், கமிஷனரிடம் வலியுறுத்தினார்.எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஏ.பி.எஸ்., நகர் பகுதி மக்களுடன், நகராட்சி அலுவலகத்தில் கமிஷனரை முற்றுகையிட்டு, கோவிலை இடிக்க கோர்ட் உத்தரவுக்கு எதிராக கொடுத்த நோட்டீைஸ திரும்ப பெற வேண்டும் என, மனு கொடுத்தனர்.கமிஷனர் சுப்பையா, நகரமைப்பு அலுவலர் சாந்தி நிர்மலா பாய் ஆகியோர் பேச்சு நடத்தினர்.அப்போது அதிகாரிகளிடம், கோவிலை இடிக்க வேண்டுமென உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதா, என எம்.எல்.ஏ., ஆவேசமாக கேட்டார். அதற்கு அதிகாரிகள் மழுப்பலான பதிலை கொடுத்தனர்.இதை தொடர்ந்து எம்.எல்.ஏ., பேசியதாவது:நல்லிக்கவுண்டர் லே - அவுட் சந்திப்பில், விநாயகர் கோவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தனி நபர்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், விநாயகர் கோவில் மற்றும் அதன் தளவாடங்களை அகற்ற வேண்டும் என்றும், 15 நாட்களுக்குள் கோவில் மற்றும் கட்டடங்களை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக, நகராட்சி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனி நபர்கள் தாக்கல் செய்ததாக கூறப்படும் வழக்கின் எண், பிறப்பித்த உத்தரவு பற்றிய எவ்வித விபரங்களும் நோட்டீசில் இல்லை.நகராட்சி தெரிவித்தது போல, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலில், கோவிலை அகற்றச் சொல்லி குறிப்பிடவில்லை. இவ்வழக்கில கோவில் நிர்வாகியும் சேர்க்கப்படவில்லை.ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் நபர்கள், வழக்கில் தரப்பினராக இல்லாததால், நேரடியாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும், தனிநபர்கள் கொடுத்த மனுவின் பேரில் விசாரணை செய்து சட்டப்படியும், நீதியின் அடிப்படையிலும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து, (கடந்தாண்டு, ஜூலை 17) ஒன்பது மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க கூறி மனுவை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.எனவே, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், முற்றிலும் மாறாகவும், பொய்யான விபரங்களை சொல்லி நோட்டீஸ் வழங்கியது சட்டப்படி தவறாகும். கோவில் நிர்வாகி, பொதுமக்களை விசாரிக்காமல், நீதியை பின்பற்றாமல் ஏதேச்சியாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சட்டப்படி நேர்மையான முறையில் விசாரணை செய்தால், தனிநபர்கள் கோரிக்கை முற்றிலும் நியாமற்றது என நிரூபணம் ஆகும். எனவே, நீதிமன்றம் பிறப்பிக்காத ஒரு போலியான உத்தரவு கோவில் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது. யாரையோ திருப்தி செய்வதற்காக, அதிகாரிகள் இவ்வாறு செயல்படுவது நியாயமற்றது.எனவே, பொள்ளாச்சி நகராட்சி நோட்டீைஸ திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் அவமதிப்பு வழக்கு தொடர்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கு கமிஷனர், 'எழுத்துப்பூர்வமாக கடிதம் தருகிறேன்' என்றார். குறுக்கிட்ட எம்.எல்.ஏ., 'பூமி பூஜைக்கு வருவதாக கூறி விட்டு, வராதது போன்று இருக்க கூடாது. நாளை (இன்று) நோட்டீஸ் திரும்ப பெறுவதாக கூறி கடிதம் அனுப்ப வேண்டும்,' என, கூறினார்.