கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வடபுதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பாதியில் நின்ற ரோடு அமைக்கும் பணியால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, வடபுதுார் ஊராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட தம்பிராஜ் நகர் பகுதியில் கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், இரண்டு ஏக்கர் நிலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டது. இதில், 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த இடத்தை விலைக்கு வாங்கி வீடுகள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடத்தில் உள்ள ரோடு முறையாக ஊராட்சிக்கு ஒப்படைக்கப்படவில்லை. அதனால், இந்த ரோடு மண் ரோடாகவே உள்ளது. இதில், மழை காலத்தில் அதிகளவு நீர் தேங்குவதால் கொசு தொல்லை அதிகரித்தும், டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது.மேலும், வாகன ஓட்டுநர்கள் இவ்வழியில் பயணிக்கும் போது கடும் சிரமத்துக்கு உள்ளாவதால், இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில், ரோடு பணி மேற்கொண்ட போது, சிலர் பணிகளை தடுத்ததால், வடபுதுார் மக்கள் ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.பொதுமக்கள் கூறுகையில், 'வடபுதுார் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ரோடு அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டோம். இதை தொடர்ந்து ரோடு பணியானது, ஊராட்சி வாயிலாக 50 சதவீதம் முடிந்த நிலையில், சிலர் ரோடு அமைக்க கூடாது என, தடுக்கின்றனர். இதுபற்றி, ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்,' என்றனர்.ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'தம்பிராஜ் நகர் பகுதியில் உள்ள ரோடு பணியை தடுத்தவர்களுடன் பேச்சு நடத்தில், ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.