கோ வை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நீதிமன்றத்தில், சாலை, நீர் வழி மற்றும் விமான போக்குவரத்து, அஞ்சல் தந்தி, தொலைபேசி, மின்சாரம், குடிநீர், பொது பாதுகாப்பு, சுகாதார அமைப்புகள், காப்பீடு, ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்களின் பொது பயன்பாட்டு சேவைகள் மற்றும் அரசு மற்றும் தனியார் துறையினரிடம் பொதுமக்களுக்கு எழும் குறைகளுக்கு, நீதிமன்ற கட்டணமின்றி தீர்வு காணப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் சாலை வசதி, குடிநீர், மின் விளக்கு, வடிகால் வசதிகளில் குறைகள் இருந்தால் மனு அளிக்கலாம். அரசு மருத்துவமனையில் சேவை குறைபாடு, தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு தொகை தர மறுப்பது, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீதான குறைகள் போன்ற பொது பயன்பாட்டு பிரச்னைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி, குறுகிய காலத்தில் நிவாரணம் பெறலாம். கல்வி நிறுவனத்தில் படிக்க இடம் கிடைத்த, ஒரு மாணவருக்கு, மற்றொரு கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்தால், அவர் விரும்பும் அக்கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான மாற்றுச்சான்றிதழ் வழங்க மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மீதமுள்ள கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது, அதற்காக மாணவர்களின் சான்றிதழை தர மறுப்பது, ஏற்கனவே செலுத்திய கட்டணத்தை திரும்ப தர மறுத்தல் போன்ற காரணங்களுக்கு புகார் மனு அளிக்கலாம். அனைத்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்படுகிறது.