பணம் வைத்து சூதாடியவர்கள் கைது
ஆனைமலை அருகே காளியாபுரம் பிரிவு பகுதியில், ஆனைமலை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய வேட்டைக்காரன்புதுார் குரு, 28, உதயகுமார், 37, நாகராஜ், 45, பிரேம்குமார், 61, ஒடையகுளம் சுரேஷ் என்கிற பகவதியப்பன், 41, பிரேம்குமார், 36 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2,030 ரூபாய் பணம் மற்றும், 52 சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மது விற்றவர் கைது
ஆனைமலை அருகே மீனாட்சிபுரம் பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, டாஸ்மாக் கடை எதிரே, சட்டவிரோதமாக மது விற்ற மீனாட்சிபுரம் மணிகண்டன், 40 என்பவரை கைது செய்த போலீசார், எட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கள் விற்றவர் கைது
ஆனைமலை அருகே, குளத்துப்புதுார் தோட்டத்துச்சாலை பகுதியில் கள் விற்பனையில் ஈடுபட்ட குளத்துப்புதுார் திருஞான சம்பந்தம், 54 என்பவரை கைது செய்த போலீசார், ஆறு லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கிணத்துக்கடவு மதுரை வீரன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் ராம் கண்ணன். இவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து போலீசார், கடையில் சோதனை செய்ததில், அவரிடம் இருந்து ஒன்பது புகையிலை பொருட்கள் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்தனர். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனர். ஊஞ்சலில் விளையாடிய சிறுமி பலி
நெகமம், கணக்கம்பட்டியைச்சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் சஸ்மிதா,10. நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது வீட்டில் சேலையில் கட்டிய ஊஞ்சலில் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சஸ்மிதா கழுத்தில் சேலை மாட்டி இறுக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் இருவர் காயம்
வால்பாறையைச்சேர்ந்தவர்கள் கார்த்திக், 20, பாலமுருகன், 20. இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். கல்லுாரி விடுமுறையையொட்டி, இருவரும் வால்பாறைக்கு பைக்கில், பொள்ளாச்சி - கோவை ரோட்டில் கல்லாங்காட்டுபுதுார் அருகே செல்லும் போது, இவர்கள் முன் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததில், பைக் லாரி மீது மோதி விபத்து நடந்தது.இதில் பைக்கில் சென்ற இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில், கார்த்தியை கோவை அரசு மருத்துவமனையிலும், பாலமுருகனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.