| ADDED : ஜன 30, 2024 10:24 PM
மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம் காரமடையில் ஸ்ரீ தாசபளஞ்சிக மகாஜன சங்க நிர்வாகிகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.அப்போது அவர்கள் மத்திய இணை அமைச்சரிடம், காரமடை தினசரி சந்தையில் கொரோனாவுக்கு முன்பு செயல்பட்டதை போல், விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வரும் நேரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.தற்போது உள்ள நேரத்தால் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. காரமடையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரங்கநாதர் கோவில் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரை தொடர்பு கொண்டு சந்தை நேரம் தொடர்பான மக்களின் கோரிக்கை குறித்து பேசினார். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த சந்திப்பின் போது வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா, துணை தலைவர் விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.---