| ADDED : ஜன 22, 2024 11:54 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சூர்யா, 21. கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். இதனிடையே கோழி கூண்டில் வைத்திருந்த முட்டையை காணவில்லை என கூறி சூர்யா எதிர்வீட்டில் உள்ள செந்தில், என்பவரிடம் தகராறு செய்தார். அக்கம் பக்கத்தினர் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பினர்.பின் சூர்யா, தனது வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருக்கையில், செந்தில் தனது உறவினர் விக்னேஷ் மற்றும் அடையாளம் தெரியாத நான்கு நபர்களுடன் சென்று சூர்யாவை தாக்கினர். இதில் விக்னேஷ் தனது கையில் வைத்திருந்த கத்தியால், சூர்யாவை குத்தினார். இதில் சூர்யாவிற்கு கை, முதுகு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. சூர்யாவின் அலறல் சத்தம் கேட்க அருகில் உள்ளவர்கள் வர, செந்தில், விக்னேஷ் மற்றும் உடன் நான்கு பேர் தப்பி ஓடி விட்டனர். உடனடியாக அங்குள்ளவர்கள் சூர்யாவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.