வடவள்ளி;மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் குறித்து, மாநகர போலீஸ் துணை கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்.மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 19ம் தேதி தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 24ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், 25ம் தேதி, திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. இதனையடுத்து, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், மாநகர போலீசார் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன், வடக்கு தாசில்தார் மணிவேல் ஆகியோர், நேற்று நேரில் ஆய்வு செய்தனர். ஆய்விற்கு பின், பக்தர்கள், மலை மேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இருந்து கோவிலுக்கு மேலே செல்ல, பழைய படிக்கட்டு பாதையிலும், கோவிலில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள், ராஜகோபுரத்தின் வழியாக கீழே இறங்கவும், பக்தர்கள் வரிசையில் நின்று பஸ் ஏற தேவையான வசதிகளையும் ஏற்படுத்த அறிவுறுத்தினர். ஆய்வின்போது, கோவில் நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.