கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் புதியதாக, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த, 2019 டிச., 22ம் தேதி நடந்தது. எப்போதும் ராமகிருஷ்ண மிஷன் நிறுவனங்களில் கட்டப்படும் கோவில்களில், குருதேவரின் திருவுருவப்படம், அதாவது, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் திருவுருவம் படம்தான் கர்ப்ப மந்திரில் வைக்கப்படும்.ஆனால், சுவாமி கவுதமானந்தர், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் திருக்கோவிலில், குரு தேவரின் பளிங்கு சிலை வைக்க ஆலோசனை வழங்கினார்.இதையடுத்து, கோல்கத்தாவில் சிலையை செய்ய முயன்ற போது, பொது முடக்கம் காலத்தினால் தடைப்பட்டது. பின்னர் மீண்டும் முயன்ற போது, சுவாமி கவுதமானந்தர் உதவினார்.இதையடுத்து, குரு தேவர் அமர கலை நயமிக்க அன்னப்பறவையுடன் கூடிய பீடம் உருவாக்கப்பட்டு, பீட ஸ்தாபன பூஜை கடந்த ஆண்டு ஆக., 23ம் தேதி நடந்தது.அன்று, 108 திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் வைணவர்களின் புனித தலங்களில் இருந்தும், ராமேஸ்வரம், பிருந்தாவனம், குரு, காசி, நர்மதை, மதுரை, பேலூர் மடம் போன்ற பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட, 145 புனித பொருட்கள் பீடத்தின் உள்ளே வைக்கப்பட்டன. குருதேவர் சிலை ஸ்தாபனம் கடந்த ஆண்டு செப்., 30ம் தேதி நடந்தது.தற்போது கட்டப்பட்டு இருக்கும் கோவிலிலில், குருதேவர் என்கிற பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கோவிலின் எதிர்புறம் உள்ள பூங்கா, கோவிலுக்கு அழகு சேர்க்கும் வகையில் தானாகவே அமைந்து விட்டது.