வால்பாறை:வால்பாறை நகரில் பள்ளி நேரத்தில், ரோட்டை கடக்க முடியாமல் மாணவர்கள் நாள் தோறும் தவிக்கின்றனர்.வால்பாறை நகரின் மத்தியப்பகுதியில், பள்ளிகள், கல்லுாரி உள்ளன. நாள் தோறும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வால்பாறை வந்து செல்கின்றனர்.இந்நிலையில், வால்பாறை நகரில் போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.பள்ளிகள், கல்லுாரி முன், காலை, மாலை நேரத்தில் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மாலை நேரத்தில் ரோட்டை கடக்க முடியாமலும் தவிக்கின்றனர்.குறிப்பாக, மூன்று ரோடுகள் சந்திக்கும் இடமான வால்பாறை போஸ்ட் ஆபீஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மாலை நேரத்தில் ரோட்டை கடக்க போராட வேண்டிய நிலை உள்ளது.சில நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்களால், மாணவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். போலீசாரும் கண்டு கொள்ளாததால், மாணவர்கள் அவதிப்படுவது தொடர்கிறது.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை நகரில், நாள் தோறும் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதிப்படுவதை தடுக்க, போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையோரங்களில் விதிமுறையை மீறி நிறுப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி முடிந்து மாலையில் மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்தில், போலீசார் பள்ளி வளாகத்தின் முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, மாணவர்கள் ரோட்டை பாதுகாப்பாக கடக்க வழி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.